
வீடு,வேலை செய்யும் இடம், பயணம் செய்யும் நேரம் ஆகிய சந்தர்ப்பங்களில், பெண்கள் சந்திக்கும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பேசியதாவது: 'மற்ற ஊர்களில் பேருந்துகளில் பெண்கள் முன்பகுதியிலும், ஆண்கள் பின்பகுதியிலும் ஏறி, இறங்குகின்றனர். அதே முறையை, சென்னையிலும் கொண்டு வரவேண்டும்.
உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி, விசாகா கமிட்டி அமைப்பது குறித்து அனைத்து அலுவலகங்களிலும் விழிப்புணர்வு போஸ்டர் வைக்க வேண்டும். கமிட்டியில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில், பலர் ஓய்வுபெற்று, வேறு இடங்களுக்கும் சென்று விட்டனர். இதனால், கமிட்டி முழுமையாக செயல்படாமல் உள்ளது. கமிட்டியை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும்.
மேலும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான தற்காப்புப் பயிற்சிகளை காவல்துறையினர் அளிக்க வேண்டும்'. இவ்வாறு, பெண்கள் பேசினர்.
சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் பேசியதாவது: 'வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை தாக்கி கொள்ளையடிப்பது தொடர்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் போது, அடையாளம் தெரியாத நபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. வியூ பைண்டர், கதவு செயின், கிரில்கேட் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நகை பாலீஷ்,தெருவில் கலவரம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றனர். வீட்டில் உள்ள தந்தை, கணவர்களுக்கு தெரியாமல் பணப் பரிவர்த்தனை செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 30 சதவிகிதம் வீட்டில் தான் நடக்கிறது. ஆபாச படங்களை காட்டுவது, ஆபாச ஜோக் சொல்வது, ஆபாச புத்தகங்களை கொடுப்பது, தவறான எண்ணத்துடன் தொட்டு பழகுவது என அலுவலகத்தில் பெண்களுக்கு பல செக்ஸ் தொந்தரவுகள் வரலாம்.
இது குறித்து,முதலில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவேண்டும். உச்சநீதிமன்றத்தின் 1998 ஆம் ஆண்டு தீர்ப்புப்படி, ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். இதில் வழக்குரைஞர்கள், காவலர்கள் பெண்கள் சங்க பிரதிநிதி இடம்பெற வேண்டும்.
விசாகா கமிட்டி முழுமையாக செயல் படாதது குறித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.
யாராவது உங்களைத் தாக்க வந்தால், குடை உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் திருப்பித் தாக்குங்கள்.உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்குத் தேவையான தற்காப்பு பயிற்சியை காவல்துறையினர் வழங்குவர்.
குற்ற ஆவணங்கள் பிரிவு உதவி ஆணையர் முத்தரசி தலைமையில் இப்பயிற்சி வழங்கப்படும். ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பு, அதன் எண்ணை குறித்து கொள்ளுங்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பகலிலும் தனியார் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும்." இவ்வாறு, ராஜேந்திரன் பேசினார்.
0 கருத்துகள்: on "ஆபத்தா தாக்கு! பெண்களுக்கு காவல்துறை அறிவுரை!"
கருத்துரையிடுக