11 ஆக., 2010

பத்திரிக்கையாளர் சந்திப்பை விடுத்து புலன் விசாரணையில் ஆர்வம் காட்டுங்கள்- சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி,ஆக11:பத்திரிகையாளர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டாமல் புலன் விசாரணையில் சிபிஐ அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினரின் 14 வயது மகள் அருஷி கடந்த 2008ம் ஆண்டு மே 16ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.அவரது வீட்டு வேலைக்காரனும் கொலை செய்யப்பட்டார்.ஆரம்பத்தில் இதனை கவுரவக் கொலையாக போலீசார் பார்த்தனர். இதனால் அருஷியை கொன்றதில் பெற்றோர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். அருஷிக்கும் அவரது வீட்டு வேலைக்காரனுக்கும் காதல் இருந்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மையான குற்றவாளியை பிடிக்க போலீசார் முயற்சிக்க வேண்டும் என அருஷியுடன் படித்த பள்ளி மாணவிகள்,பல்வேறு பெண் அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அருஷி கொலை வழக்கில் தெளிவு பிறக்கவில்லை.ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் சிபிஐ கைது செய்தது.ஆனால் போதிய ஆதாரம் கிடைக்காததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் பெற்றோர் மீதான சந்தேகக் கணையை சிபிஐ அதிகாரிகளும் விலக்கிக் கொள்ளவில்லை.பத்திரிகைகளில் தொடர்ந்து யூகங்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகைகள் அடக்கி வாசிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து, அருஷி கொலை வழக்கில் கற்பனை செய்திகளை வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அல்டமாஸ் கபீர் மற்றும் ஏ.பி.பட்நாயக் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீண்டும் உறுதி செய்த நீதிபதிகள், சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:
"பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட விரும்பவில்லை. இருப்பினும் பொறுப்பற்ற செய்திகள் வெளியாவதை யாராவது தடுத்தே ஆக வேண்டும். பத்திரிகை சுதந்திரம் மிக முக்கியம்.ஆனால் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். அது இல்லையெனில் என்ன செய்வது? இது மிகவும் தீவிரமான விஷயம். கொலை செய்யப்பட்ட பெண்ணின் நற்பெயர் என்ன ஆவது? இது தொடர்பாக பத்திரிகைகளுக்கு செய்தி கசிய விடுவதை சிபிஐ அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விசாரணை நடத்துவதைக் காட்டிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்தான் ஒரு சில சிபிஐ அதிகாரிகளுக்கு ஆர்வம் உள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பை கைவிட்டு புலன் விசாரணையில் ஆர்வம் காட்டுங்கள்." இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பத்திரிக்கையாளர் சந்திப்பை விடுத்து புலன் விசாரணையில் ஆர்வம் காட்டுங்கள்- சிபிஐ க்கு உச்சநீதிமன்றம் அறிவுரை"

கருத்துரையிடுக