27 ஆக., 2010

அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

வாஷிங்டன்,ஆக27:அமெரிக்காவிலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில்,டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை பல அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்"

Unknown சொன்னது…

ottu motha teeviravaathihalayum paalooti valarpathu america thaan ivarhal teeviravathathai olika pogirom enpathu periya nahaichuvai

கருத்துரையிடுக