27 ஆக., 2010

காவி பயங்கரவாதம் குறித்த உள்துறை அமைச்சரின் பேச்சு: அமளியில் காவிக்கட்சிகள்

புதுடெல்லி,ஆக.27:'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்தியதற்கு மக்களவையில் வியாழக்கிழமை காவிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுவதோடு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சிவசேனை மற்றும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்தப் பிரச்னையில் சிவசேனை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது உள்துறை அமைசச்ர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இந்தப் பிரச்னை வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.மக்களவையில் சிதம்பரத்தின் கருத்தைக் கண்டித்து முதலில் சிவசேனை உறுப்பினர்கள் சந்திரிகாந்த் கைரே, சுபாஷ் வாங்கடே, கணேஷ் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து, அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சிதம்பரம் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சிவசேனை கட்சிப் பத்திரிகை சமனாவில் எழுதப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக்காட்டி முழக்கம் எழுப்பினர்.

சிவசேனை உறுப்பினர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் குரல் கொடுத்தனர். பாஜக உறுப்பினர்கள், அனந்தகுமார் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.

பாஜக மூத்த உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி சிதம்பரம் கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். காவி என்பது அமைதியின் அடையாளம். அதை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது என்று கூறினார். இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் தக்க பதிலடி கிடைக்கும். பதிலுக்கு நாங்களும் சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறு சொல்லுங்கள் என்றார் அவர்.

அமைச்சர் சிதம்பரம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரி சிவசேனை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

மாநிலங்களவையில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது.அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கோரினார். அவருக்கு ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். எனவே அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு பாஸ்வான் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர் வெங்கைய்யா நாயுடு குற்றம்சாட்டினார். ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்களும் எழுந்து நின்று பேசினர். அப்போது அவையில் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இப் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்ற பாஸ்வானின் கோரிக்கையை அவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார்.

டெல்லியில் மாநில காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காவி பயங்கரவாதம் வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
ஹைதராபாத், அஜ்மீர், கோவா, மாலேகான், மோதாசா (குஜராத்) ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவி பயங்கரவாதம் குறித்த உள்துறை அமைச்சரின் பேச்சு: அமளியில் காவிக்கட்சிகள்"

கருத்துரையிடுக