3 ஆக., 2010

சொராஹ்ப்தீனைக் கொல்ல ராஜஸ்தானில் சதி?

அகமதாபாத்,ஆக,3:சொராஹ்ப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளசர்பீ ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய காரணகர்த்தாக்கள் ராஜஸ்தானில் இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

வசுந்தர ராஜே சிந்தியா முதல்வராக இருந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த குலாப் சந்த் கட்டாரியாவுக்கு இதற்காக மார்பிள் தொழிலதிபர்கள் ரூ.10 கோடி பணம் கொடுத்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனது கவனத்தை ராஜஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது சிபிஐ.

சொராஹ்ப்தீன் ஷேக்,கெளசர்பீ கொலை தொடர்பாக குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,சொராஹ்ப்தீன் வழக்கில் முக்கிய சாட்சியான பிரஜாபதி முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருடன் இருந்த இன்னொரு கைதியான அஸம்கான் என்பவர், ராஜஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்த குலாப் சந்த் கட்டாரியாவுக்கு மார்பிள் தொழிலதிபர்கள் கூட்டாக சேர்ந்து ரூ.10 கோடி பணத்தைக் கொடுத்து சொராஹ்ப்தீனை தீர்த்துக் கட்டக் கோரினர். இந்தப் பணத்தை ஆர்.கே. மார்பிள் நிறுவன உரிமையாளர்கள் கட்டாரியாவிடம் வழங்கினர் என்று கூறினார்.

இது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சொராஹ்ப்தீன் குறித்தும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தானில் உள்ள மார்பிள் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களை பலமுறை மிரட்டிப் பணம் பறித்துள்ளாராம் சொராஹ்ப்தீன். அவர்களது சட்டவிரோத நடவடிக்கைகளை அறிந்து கொண்டு அவற்றைக் கூறி மிரட்டிப் பணம் பறித்ததாக தெரிகிறது.

இதனால் அவரது தொல்லை பொறுக்க முடியாமல்தான் தீர்த்துக் கட்டும் முடிவுக்கு ராஜஸ்தான் மார்பிள் தொழிலதிபர்கள் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் முதலில் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜேவை அணுகியுள்ளனர். ஆனால் அவர் இதில் தலையிட முடியாது என மறுத்துவிட்டதால், கட்டாரியாவை அணுகியுள்ளனர்.

இதையடுத்து கட்டாரியாவுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துள்ளனர். ஆனால் ராஜஸ்தானில் வைத்து சொராஹ்ப்தீனை தீர்த்துக் கட்டினால் ராஜஸ்தான் பாஜகவுக்கு பிரச்சினை வரும் என்பதால் மோடி ஆதிக்கத்தின் கீழ் உள்ள குஜராத்துக்கு இதை மாற்றி போலி என்கவுன்டர் மூலம் அவரை தீர்த்துக் கட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து கட்டாரியாவை விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அதேபோல வசுந்தராவையும் விசாரிக்க விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாம்.

இந்த வாரத்திலேயே சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது. வசுந்தரா, கட்டாரியா தவிர,ராஜஸ்தான் பாஜக மூத்த தலைவர் ஓம் மாத்தூருக்கும் சம்மன் அனுப்பப்பபடும் எனத் தெரிகிறது. இவர் ராஜஸ்தான் பாஜக எம்.பி. ஆவார்.

மேலும்,சொராஹ்ப்தீனின மிரட்டலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் உதய்ப்பூரில் உள்ள மார்பிள் அதிபர்கள்தான் என்றும் கூறப்படுகிறது. அங்குதான் பெருமளவு பணத்தை சொராஹ்ப்தீன் மிரட்டல் மூலம் பறித்துள்ளதாகவும் தெரிகிறது. எனவே அவர்களுக்குத்தான் சொராஹ்ப்தீன் படுகொலையில் முக்கியப் பங்கு இருக்கும் எனவும் சிபிஐ சந்தேகிக்கிறது

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சொராஹ்ப்தீனைக் கொல்ல ராஜஸ்தானில் சதி?"

கருத்துரையிடுக