13 ஆக., 2010

மம்தாவுக்கெதிராக பா.ஜ.கவும் சி.பி.எம்மும்

மாவோயிஸ்டுகளுடன் மம்தா பானர்ஜி கைக்கோர்த்துள்ளார் என்ற குற்றச்சாட்டுடன் களமிறங்கியுள்ளன பா.ஜ.கவும், சி.பி.எம்மும்.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரு கட்சியினரும் கைக்கோர்த்து நின்று திரிணாமுல் காங்கிரஸிற்கு எதிராக அமளியை ஏற்படுத்தினர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதுதான் பா.ஜ.கவின் லட்சியம். சி.பி.எம்முக்கோ மேற்குவங்காளத்தில் தங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க திட்டமிடும் திரிணாமுல் காங்கிரஸின் முயற்சிகளுக்கு தடைபோடவேண்டும் என்ற எண்ணம்.

ஒட்டுமொத்தமாகக் கூறினால் இருகட்சியினரும் மம்தாவின் குருதிக்காக தாகமெடுத்து அலைகின்றனர். அவருக்கெதிரான போராட்டத்தில் பாசிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் கரம் கோர்த்துள்ளனர்.

ஆனால், மம்தாவுக்கெதிரான இந்த போர் முழக்கம் எவ்வளவு தூரம் சரி என்பதைக்குறித்து நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

மம்தா பானர்ஜி லால்கருக்குச் சென்றதிலும், மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததையும் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம்.

அதேவேளையில், இந்த ஆதாயத்திற்கு பின்னணியில் நல்லெண்ணத்தின் அடிப்படை உண்டு என்பதுதான் உண்மை. மாவோயிஸ்டுகளிடம், வன்முறை பாதையை கைவிடுமாறும், சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகவேண்டும் என்பதுதான் மம்தா விடுத்த கோரிக்கை. பயன்தரத்தக்க விவாதங்களின் வாயிலைத் திறக்கும் ஜனநாயக நடவடிக்கைகளுக்குத்தான் மாவோயிஸ்டுகளை அழைத்துள்ளார் மம்தா.

மாவோயிஸ்டுகளின் செய்தித் தொடர்பாளரான ஆஸாதின் கொலையில் மம்தா வருத்தம் தெரிவித்தற்கு காரணம், பேச்சுவார்த்தையின் வாயில்களை மூடிவிடுமோ என்ற கவலையின் காரணமாகத்தான். இதனை அங்கீகரிப்பதுதான் ஜனநாயக உணர்வும், தேசத்தின் மீது பற்றுடையவர்களும் செய்யவேண்டியது.

மேதா பட்கரும், சுவாமி அக்னிவேசும், மஹா சுவேதாதேவியும் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மம்தாவின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தது இதேக் காரணத்தினால்தான்.

இச்சூழலில் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை முக்கிய அரசியல்கட்சிகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மனதைத்தொட முயல்கின்றார்கள் என்பதன் அடையாளமாகத்தான் காணவேண்டும்.

கவலைக்குரிய விஷயம் என்னவெனில், மம்தாவின் இந்த நல்லெண்ணத்தை, பா.ஜ.கவும், சி.பி.எம்மும் புரிந்துக் கொள்ளவில்லை என்பதுதான்.

கஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்திலும், அமைதி ஏற்பட ஒரு வாய்ப்பு அளியுங்கள் என்ற வேண்டுகோள்தான் அடங்கியுள்ளது. உள்ளார்ந்த நேர்மை அதாவது ஆத்மார்த்தமான எண்ணம்தான் மம்தா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங்கின் நிலைப்பாடுகளுக்கு பின்னணியில் உள்ளதென்றால், நம் தேசம் சந்திக்கும் எத்தனையோ உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வாயில் திறக்கும்!

அவ்வாறல்ல! எதிர்கருத்துடையோரை அடக்கி ஒடுக்கி விட்டு, அத்தகையவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து ஒழித்துவிடலாம் என எண்ணினால், நாம் வெறுப்பைத் தூண்டும் அரசியலை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருளாகும். இது நிச்சயமாக தேச நலனுக்கு எதிரானதாகவே அமையும்.

துரதிர்ஷ்டவசத்தால் நம் நாட்டின் இரு எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து முயற்சிப்பது இத்தகையதொரு வெறுப்பைத் தூண்டும் அரசியலை வளர்ப்பதற்காகும். ஆகையால், இவர்களின் நோக்கம் விசாரணைச் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மம்தாவுக்கெதிராக பா.ஜ.கவும் சி.பி.எம்மும்"

கருத்துரையிடுக