12 ஆக., 2010

சுயாட்சி:கஷ்மீரிகள் நிராகரிப்பு

ஸ்ரீநகர்/புதுடெல்லி,ஆக12:கஷ்மீரில் அமைதியை மீண்டும் நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கத் தயார் என்ற இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் வாக்குறுதியை கஷ்மீர் அமைப்புகள் நிராகரித்துவிட்டன.

முக்கிய எதிர்கட்சியான பி.டி.பி, இரு பிரிவு ஹுரியத் கட்சிகள், பீப்பிள்ஸ் காங்கிரஸ் ஆகியன பிரதமரின் இவ்வறிவிப்பு மோசடியானது எனக்குறிப்பிட்டுள்ளன.

ஆளும் கட்சிகளான தேசிய மாநாட்டுக்கட்சியும், சி.பி.எம்மும் இதனை வரவேற்றுள்ளன. கஷ்மீரை இந்தியாவுக்கு இழக்கச் செய்யும் நடவடிக்கை இது எனக்கூறி பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவார அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதித்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங் கஷ்மீரிகளுக்காக உருதுவில் ஆற்றிய உரையில்தான் கஷ்மீருக்கு சுயாட்சியைக் குறித்து பேசினார்.

அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் சூழலில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கஷ்மீருக்கு சுயாட்சி வழங்கத் தயார் என பிரதமர் வாக்குறுதியளித்தார். ஆனால், பிரதமர் கஷ்மீரிகளோடு ஜோக்கடிக்கிறார் என பி.டி.பி தலைவரும், முன்னாள் முதல்வருமான முஃப்தி முஹம்மது ஸஈத் கருத்துத் தெரிவித்தார். பிரதமருடனான பேச்சுவார்த்தை வீண் என்றும் அவர் தெரிவித்தார்.

சுயநிர்ணய உரிமை தவிர வேறொன்றையும் கொண்டு கஷ்மீரிகளை திருப்திப்படுத்த முடியாது என ஹுர்ரியத் கான்ஃப்ரன்ஸ் தலைவர்களான மீர் வாய்ஸ் ஃபாரூக், செய்யத் அலிஷா கிலானியும் உறுதியாக கூறியுள்ளனர்.

பிரதமர் கூறுவதுபோல், வேலைக்காக அல்ல கஷ்மீர் இளைஞர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்வது. இந்திய பிரதமர் கஷ்மீர் என்று பலத்தடவை தனது உரையில் பயன்படுத்தினார்.ஆனால், கஷ்மீரிகள் எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து தெருவில் இறங்கி முழக்கிய கோரிக்கை கோஷங்களை பிரதமர் புறக்கணித்துள்ளார்.

வேலையும், பொருளாதார உதவியும் தேவைதான், ஆனால் கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கு பகரமாக அமையாது என்றும் கிலானி சுட்டிக்காட்டினார்.

கஷ்மீரில் பொருளாதாரப் பிரச்சனையல்ல, மாறாக அரசியல் பிரச்சனைதான் என்பதை பிரதமர் புரிந்துக்கொள்ள வேண்டும் என மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார்.

பிரிட்டீஷாருக்கெதிராக போராடிய பொழுது இந்தியர்களுக்கிருந்த அதே சிந்தனைதான் தற்பொழுது கஷ்மீரிகளுக்கு உள்ளது. கஷ்மீர் சர்ச்சைக்குரிய என பிரகடனப்படுத்தி, அரசியல் சிறைக்கைதிகள் அனைவரையும் விடுதலைச் செய்து,கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறும்வரை கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்பாது என அவர் தெரிவித்தார்.

"எங்களின் போராட்டம் சுதந்திரத்திற்காகத்தான்" என கடந்த தேர்தலில் போட்டியிட்ட பீப்பிள்ஸ் காங்கிரஸ் தலைவர் ஜாவீத் மிர் தெரிவித்துள்ளார். சரியான திசையை நோக்கி எடுத்து வைத்த காலடி என பிரதமரின் வாக்குறுதியை மத்திய அமைச்சர் ஃபாரூக் அப்துல்லாஹ் பாராட்டியுள்ளார்.

சுயாட்சியைக் குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த ஜம்முகஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஸைபுதீன் ஸோஸ் பிரதமரின் முயற்சிகளை பாராட்டினார்.

அதேவேளையில்,மன்மோகன்சிங்கின் கஷ்மீர் சமாதானத் திட்டத்தை கண்டித்த பா.ஜ.க,ஜம்மு-கஷ்மீரில் சுயாட்சி கொண்டுவரும் முயற்சி அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் பிரதமரின் அறிவிப்பை கண்டித்த பா.ஜ.க,பிரதமரின் அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது எனக்கூறியுள்ளது. பாதுகாப்பு ஏஜன்சிகளின் மனோதிடத்தை தகர்க்கும் நிலைப்பாடாகும் இது எனக்கூறிய பா.ஜ.க, சுயாட்சியின் மூலம் எதனை பிரதமர் விரும்புகிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுயாட்சி:கஷ்மீரிகள் நிராகரிப்பு"

கருத்துரையிடுக