6 ஆக., 2010

கர்நாடக அரசின் பசுவதைத் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: தேவ கெளடா

புதுடெல்லி,ஆக6:கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பசுவதைத் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது என்று மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கெளடா கூறினார்.

இதுதொடர்பாக டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை, கெளடா வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

"சமீபத்தில் இந்த மசோதாவை கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின்படி கர்நாடகம் முழுவதும் கால்நடைகளை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள், ஜாமீனில் கூட வெளிவர முடியாது. அந்த அளவுக்கு கடுமையான விதிகள் மசோதாவில் புகுத்தப்பட்டுள்ளன.

சமூகத்தில் ஒரு பிரிவினர் கால்நடைகளை வெட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர்; மேலும் சிலர் கால்நடைகள் வெட்டி அதன் மாமிசத்தை விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.


இந்தச் சட்டம் அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக அமைந்துள்ளது. இந்த சட்டமே தேவையற்றது.

அரசியலமைப்புச் சட்டத்தையே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது இந்தப் புதிய சட்டம். இது சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல.

அனைத்து சமூகத்துக்கு எதிரானதும், தலித் மக்களுக்கு எதிரானதும் ஆகும். மேலும் பெரும்பகுதி மக்களின் உணவுப் பழக்கத்துக்கு எதிராக விழுந்த அடியாகும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு போய்விடும்.

மேலும் ஏற்கெனவே பாதிப்பில் இருக்கும் கர்நாடக மாநில பண்ணைத் தொழில் சமுதாயத்தினரின் நிலைமை இன்னும் மோசமாகும். எனவே இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது" என்றார் அவர்.

கெளடாவுடன் அவரது மகன்கள் ரேவண்ணா,குமாரசாமி உட்பட 42 எம்எல்ஏக்களும் உடன் வந்திருந்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்நாடக அரசின் பசுவதைத் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரக்கூடாது: தேவ கெளடா"

கருத்துரையிடுக