புதுடெல்லி,ஆக:2002 குஜராத் கலவரத்தில் பெற்ற மகள்கள் உட்பட தனது குடும்பத்தினரை தன் கண்முன்னே மிருகத்தனமாக கற்பழித்து கொலை செய்த கொடுமையை கண்ணீர் மல்க கூறியுள்ளார் ஃபர்ஜானா பானு.இவர் தனக்கு நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞரை கோரியுள்ளார், ஆனால் கிடைக்கவில்லை. இதேபோல் 9 மாத கர்ப்பிணி கவுசர் பானுவை கற்பழித்து கொலை செய்த வழக்கில் சாட்சியான ஜன்னத்பீ ஷேக்கும் குஜராத் நீதிமன்றங்களில் மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
"அரசாங்க வழக்கறிஞர்கள் தங்களின் வாக்குமூலத்தை மாற்ற முயல்வதாகவும், மிகுந்த நிர்பந்தத்திற்கு பிறகும் உண்மையை கூறிய போதிலும் நாங்கள் கூறியது பொய் என்று வாதாடுகிறார்கள்." என்று ஜன்னத்பீ கூறுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் வெளியிட்ட "2002 படுகொலையில் உயிர் பிழைத்தவர்கள்" என்ற அறிக்கையில் இதுபோன்ற பெண் சாட்சியங்களின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, படுகொலையில் சாட்சியங்களான பெண்கள், பெண் வழக்கறிஞர்கள் கிடைக்காததிலிருந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் அசௌகர்யமான கருத்துகள் வரை பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதுத் தவிர வெளியில் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் குற்றவாளிகளிடமிருந்து மிரட்டல்களும் வருகின்றன.
அஹமதாபாத் நரோடா பாட்டியா படுகொலையில் தப்பித்தவரான ஷகீலா பானு,"எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக இங்கேயே தங்கியிருக்கிறோம் என்றும், வெடிகுண்டு, துப்பாக்கி தாக்குதலுக்குப் பயந்து இரவு 8 மணிக்குமேல் கதவு ஜன்னல்களை அடைத்துக் கொள்வோம். இரவு பகலாக மிரட்டல்கள் வருகின்றன." என்று கூறுகிறார்.
"உயிர் பிழைத்த பெண் சாட்சியங்களிடம் நீதிமன்ற விசாரணையின் போது ஆபத்தான சூழலில்,முறையான விளக்கமில்லாமல் வற்புறுத்தப்பட்டு வாக்குமூலங்களை பெறுவதாகவும், இது மனித உரிமையை மீறும் செயல்." என்கிறார் மனித உரிமை ஆர்வலரும் 'Citizens for Justice and Peace' அமைப்பின் பொதுச் செயலாளருமான தீஸ்தா செடல்வாத் குற்றஞ்சாட்டுகிறார்.
"குஜராத் நீதிமன்றங்களில் இவ்விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் நீதி கிடைக்காது,குஜராத்திலிருந்து இந்த வழக்குகள் வெளியே சென்றால்தான் எங்களுக்கு நீதி கிடைக்கும்" என்று பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.

0 கருத்துகள்: on "குஜராத் கலவரத்தை தொடர்ந்து,நடைபெறும் மனவேதனையான அனுபவங்களை கூறும் பெண் சாட்சிகள்"
கருத்துரையிடுக