
இதுகுறித்து ஆசாத் லோக்சபாவில் பேசுகையில்,
"வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதம் 2.1 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கத்தின் விகிதம் 3.8 சதவிகிதமாக உள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம்.
இதே போன்று ராஜஸ்தான், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மணிப்பூர், மிசோரம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் தொகை வேகமாக பெருகி வருகிறது. இதனால் நாட்டின் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும். மக்கள் தொகை பெருக்கத்தின் இந்த அதீத வேகம் கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா, மேற்கு வங்கம், கோவா, இமாச்சல பிரதேசம், டெல்லி, சிக்கிம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுக்குள் உள்ளது.
நாட்டின் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கும் மக்கள் தொகை பெருக்கத்துக்கும் நேரடி சம்பந்தம் உள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் மக்கள்தொகை பெருக்கம் அதிகமாக உள்ளது கவலையளிக்கிறது. பூமியின் நிலப்பரப்பில் 17 சதவிகிதத்தை மக்கள் தொகை ஆக்கிரமித்துள்ளது. இதில் இந்திய மக்கள்தொகையின் ஆக்கிரமிப்பு மட்டும் 2.4 சதவிகிதம் ஆகும்.
வறுமையும், இளம் வயதில் திருமணம் முடிப்பதும் தான் மக்கள் தொகை பெருக்கத்திற்கான முக்கிய காரணங்கள். என்ன தான் அரசு பெண்ணின் திருமண வயது 18 என்று அறிவித்திருந்தாலும் பீகாரிலும், உத்தர பிரதேசத்திலும் 18 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுகின்றனர்.
இந்த வேகத்தில் சென்றால் இன்னும் 16 ஆண்டுகளில் மக்கள் தொகை மேலும் 36 கோடி அதிகரித்துவிடும். அதில் 50 சதவிகிதம் இந்த 6 வட மாநிலங்களில் தான் இருக்கும்.
மக்கள் தொகை பெருகிக் கொண்டும், நாட்டின் வளங்கள் குறைந்து கொண்டும் வருகின்றன. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு தனி நபரின் கையில் உள்ளது" என்றார்.
0 கருத்துகள்: on "மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது: குலாம்நபி ஆசாத் கவலை"
கருத்துரையிடுக