20 ஆக., 2010

'அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடி பணியும் இந்தியா'

டெல்லி,ஆக20:போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனத்திடமிருந்து ரூ.1,500 கோடியைப் பெறும் முயற்சியைக் கைவிட இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

இதற்கு ஆதாரமாக திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், அமெரிக்க பாதுகாப்புத் துறை இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மனும் பரிமாறிக் கொண்ட இ-மெயிலை ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை பிரச்னை எழுப்பினர். சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,

"மாண்டேக் சிங் அலுவாலியாவுக்கும், அமெரிக்க இணையமைச்சர் மைக்கேல் ஃபோர்மெனுக்கும் இடையிலான இ-மெயில் பரிமாற்றம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியாவை தங்கள் நிர்பந்தத்துக்கு பணியுமாறு அமெரிக்க இணையமைச்சர் கூறியுள்ளார். உலக வங்கியில் இந்தியாவுக்கு கடன் கிடைக்கும் விஷயத்தில் நாங்கள் உதவுகிறோம். ஆனால் போபால் விஷவாயு விவகாரத்தில் அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெறும் விஷயம் மேலும் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இந்தியா-அமெரிக்கா இடையிலான முதலீட்டு உறவுகள் கெடாமல் இருக்கும் என்று அமெரிக்க அமைச்சர் தனது இ-மெயிலில் கூறியுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்கா இந்தியாவை தாங்கள் கூறியபடி நடந்து கொள்ள நிர்பந்தப்படுத்தியுள்ளது தெளிவாகிறது.நமது நாட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிட்டு மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. நமது அரசும் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கு பணிகிறது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது.

அண்மையில் போபால் விஷவாயு விவகாரம் குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு வெளிநாடுகளில் இருந்து எவ்வித நிர்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார். இது குறித்து மத்திய அரசு முழுமையான விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.

போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் டெள கெமிக்கல் நிறுவனம் (இந்த நிறுவனம்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது) ரூ. 1,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று கடந்த ஜூன் 22-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி கூறுகையில்,
"இது பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் வந்துள்ள மறைமுக நெருக்குதல். போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது மட்டுமன்றி, அந்த நிறுவனத்தில் உள்ள விஷக்கழிவுகளை அகற்றும் பொறுப்பையும் டெள கெமிக்கல் நிறுவனம்தான் ஏற்க வேண்டும்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'அமெரிக்க நிர்ப்பந்தத்திற்கு அடி பணியும் இந்தியா'"

கருத்துரையிடுக