29 செப்., 2010

பாப்ரி மஸ்ஜித்:20 விஷயங்களில் தீர்ப்பு

லக்னோ,செப்,29:சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கப் போகிறது. 28 கட்சிதாரர்கள் உட்படும் 5 வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.

நாளை அளிக்கும் தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்கள் இவையாகும்:
1.தகர்க்கப்பட்ட கட்டிடம் முஸ்லிம்களின் மஸ்ஜிதா?
2.அந்த கட்டிடம் எப்பொழுது நிர்மாணிக்கப்பட்டது
3.ஹிந்து கோயிலை இடித்துவிட்டா அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது?
4.முஸ்லிம்கள் தொன்றுதொட்டே இங்கு தொழுகை நடத்தி வருகின்றார்களா?
5.சர்ச்சைக்குரிய கட்டிடம் நிரந்தரமாகவும், தெள்ளந்தெளிவாகவும்
முஸ்லிம்களின் கைவசமிருந்ததா?
6.1949 ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களின் கைவசமாக அந்த கட்டிடம் இருந்ததா?
7.கட்டிடத்தின் மீது ஹிந்துக்கள் உரிமைக் கோரியது மிகவும் காலந்தாழ்ந்து உருவானதா?
8.முஸ்லிம்களுடைய நிரந்தரமான, தெள்ளந்தெளிவான உடமை உரிமையை தகர்த்துவிட்டா ஹிந்துக்கள் அவ்விடத்தில் வழிபாட்டுரிமையை பெற்றனர்?
9.இந்த இடம் ஹிந்துக்களின் நம்பிக்கையின்படி ராமன் பிறந்த இடமா?
10.ராமனுடைய பிறந்த இடம் என்ற நிலையில் ஹிந்துக்கள் புராதனக் காலம் முதல் இங்கு வழிபாடு நடத்துகின்றனரா?
11.கட்டிடத்தில் காணப்படும் சிலையும் இதர ஹிந்துமத
வழிபாட்டுப் பொருட்களும் 1949 டிசம்பர் 22 ஆம் தேதி ரகசியமாக அங்கு வைக்கப்பட்டது என்ற வாதம் சரியா?
12.தகர்க்கப்பட்ட கட்டிடத்தோடு இணைந்துள்ள ராம்சம்பூத்ரா, பண்டாரம், சீதா ரஸோயி ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படும் நிர்மாணங்கள் உண்மையில் என்ன? அவை கட்டிடத்தின் ஒருபகுதியா?
13.கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதி புராதனமானதா?
14.சிலைகள் இருக்குமிடத்தில் முஸ்லிம்களின் மஸ்ஜித் கட்ட அனுமதியில்லை என்ற இஸ்லாமிய சட்டத் திட்டத்தின்படி இது மஸ்ஜிதாக இருக்க முடியாது என்ற வாதம் சரியா?
15.ஹிந்துக்களுக்கு மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்ட இடமா சர்ச்சைக்குரிய பகுதி?
16.இடிக்கப்பட்ட பிறகு இது ஒரு முஸ்லிம் வழிப்பாட்டுத் தலமா?
17.சர்ச்சைக்குரிய இடம் முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் என்றால் தொடர்ந்து வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாமா?
18.இடத்தின் உரிமை எந்த கட்சிதாரருக்கு?
19.இதர முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளிலிருந்து வித்தியாசமாக சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் மினாராக்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததால் அது ஒரு முஸ்லிம் மஸ்ஜித் என்ற வாதம் சரியா?
20.இடத்தின் உரிமை கிடைக்காத கட்சிதாரருக்கு எவ்வித வணக்க வழிபாட்டிற்குரிய வசதிகளை செய்துக் கொடுப்பது?

மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் இலக்கமிட்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்காது. ஆனால் மேற்குறிப்பிட்ட விஷயங்களை அடக்கிய பொதுவான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கும்.

வரலாற்று ரீதியான, நம்பிக்கை ரீதியான தர்க்க விவகாரத்தில் விஞ்ஞானப் பூர்வமான தொல்பொருள் ஆய்வு நடத்திய பிறகு கூறப்படும் இத்தீர்ப்பு வரலாற்றில் அபூர்வமானதாகும்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:20 விஷயங்களில் தீர்ப்பு"

கருத்துரையிடுக