9 செப்., 2010

தேசம் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள்

மாவோயிஷம், கஷ்மீர், பாப்ரி மஸ்ஜித் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு ஆகியன தேசத்தின் எதிர்காலத்திற்கு தொடர்புடைய முக்கியக் காரணிகள் என பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங் கருத்துத் தெரிவித்திருந்தார். டெல்லியில் நடந்த பத்திரிகை அதிபர்களுடனான சந்திப்பில் இதனைக் கூறியிருந்தார் அவர். ஆனால், அவருடைய கூற்றில் ஒரு சோகம் இழையோடியது. இந்த தேசம் சந்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள்தான் இம்மூன்றும்.

பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகள் என்றாலும், அவசரமாக தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகள் இவை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

மாவோயிஷமும்,கஷ்மீர் விவகாரமும் தினந்தோறும் மோசமடைந்து வருகிறது. இரண்டு விவகாரங்களிலும் மத்திய அரசின் புறத்திலிருந்து பேச்சுவார்த்தை பிரகடங்களைத் தவிர நம்பிக்கையூட்டும் அளவிலான முன்னேற்றத்திற்குரிய எவ்வித நடவடிக்கைகளும் தென்படவில்லை.

கஷ்மீரில் போராட்டம் அம்மாநிலத்தை மேலும் வன்முறைக் களமாக மாற்றியுள்ளது. கடந்த சில வாரங்களில் ஏராளமான இளைஞர்கள் போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் பலியாயினர். கஷ்மீரிகளின் நம்பிக்கையை பெறும் விதமாகவும், கஷ்மீரின் பிரச்சனைக்குரிய அடிப்படைக் காரணம் என்பதை ஆராயும் விதமான நடவடிக்கைகள் தான் மத்திய அரசிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

குண்டு சத்தங்களின் ஓசை அடங்கிப்போகும் வேளையில் மீண்டும் மோதல் உருவாகும் சூழல் கஷ்மீரில் ஏற்பட்டுவருகிறது. இதில் யார் தவறுச் செய்கிறார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை. கஷ்மீர் பிரச்சனைக்கு முக்கியக் காரணம் என்ன என்பது அம்மாநிலத்தின் நிலைமைகளை உற்றுக் கவனிப்போருக்கு தெளிவாகத் தெரியும். காவல்துறைக்கும்,ராணுவத்தினருக்கும் வழங்கப்பட்ட வரம்பு மீறிய அதிகாரங்களாகும். அவைதான் இப்பிரச்சனைக்கு காரணம்.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் சுதந்திரதினச் செய்தியில் பிரகடனப்படுத்தியிருந்தனர். மாவோயிஸ்டுகளும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்திருந்தனர். மூன்று மாத போர் நிறுத்த வாக்குறுதியை முன்வைத்தார் மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி. ஆனால், என்கவுண்டரில் மாவோயிஸ்டு தலைவர் ஆஸாத் கொல்லப்பட்டது சமாதான முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக மாறியது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு தயார் எனக் கூறினாலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் சூழலில் அவருடைய கூற்றை சந்தேகக் கண்ணோட்டத்தோடு காண்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.

பாப்ரி மஸ்ஜித் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு மத்திய அரசுக்கும், உ.பி மாநில அரசுக்கும் தலைவலியை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாகயிருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என சில முஸ்லிம் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆனால், பா.ஜ.க மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளின் நிலைப்பாடு இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

தேசத்தின் நீதிபீடத்தையும்,ஜனநாயக மரபுகளையும் குழித்தோண்டிப் புதைத்துவிட்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தக் கூட்டம் தங்களுடைய மறுவரவிற்கு இப்பிரச்சனையை பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.

பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான குறுக்கு வழியாக பயன்படுத்திய ஹிந்துத்துவா வலதுசாரிகளின் நிலைப்பாட்டால் ஏற்பட்ட வேதனைக்குரிய கசப்பான சுவையை தேசம் இன்றும் அனுபவிக்கிறது.

மீண்டும் இந்த தேசத்தின் மக்களுடைய மனங்கள் பிளவுப்பட்டுப் போவதை கவலையோடுத்தான் பார்க்க இயலும். இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் உள்ளார்ந்த நேர்மையுடனான பாரபட்சமற்ற நிலைப்பாடுகள்தான் ஆட்சியாளர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தேசம் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள்"

கருத்துரையிடுக