9 செப்., 2010

அணு விபத்து நஷ்டஈடு மசோதா மீது அமெரிக்க தொழிற்துறையினர் அதிருப்தி

வாஷிங்டன்,செப்.9:கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா மீது அமெரிக்காவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவில் இந்தியா திருத்தம் செய்யவேண்டும் என அந்நாடு எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் அமைக்கப்படும் அணு உலைகளில் விபத்து நேரும்போது, அதில் பாதிப்படைந்தவர்களுக்கு, அந்த உலை அமைக்க சாதனங்கள், தொழில்நுட்பம், சம்பந்தப்பட்ட இதர சேவைகளை வழங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதற்கு வகை செய்கிறது இந்த மசோதா.

நஷ்ட ஈட்டு அளவு வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அந்த கட்சிகள் கோரியபடி திருத்தம் செய்து எதிர்க்கட்சியான பாஜக ஆதரவுடன் நிறைவேற்றியது.

விபத்து நடக்கவேண்டும் என்கிற திட்டமிட்ட நோக்கத்துடன், உலையை வழங்கிய நிறுவனங்கள் செயல்பட்டதாக நிரூபித்தால் மட்டுமே அணு உலை நிறுவனங்கள் இழப்பீடு கோரமுடியும் என்று முதலில் இருந்தது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் பின்னர் அது மாற்றப்பட்டது.

மசோதாவில் உள்ள இத்தகைய சில அம்சங்கள் ஏற்கத் தக்கத்தாக இல்லை என அமெரிக்க அணு வர்த்தக தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்திய அணு சக்தி வர்த்தக தொழில்துறையினர் மத்தியிலும் இந்த மசோதா மீது அதிருப்தி உள்ளது என்பதை அமெரிக்கா அறியும். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா அரசுடன் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது என்று நிருபர்களிடம் தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோலி.

அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகு இப்போதுதான் முதல் முறையாக அதுபற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்திலிருந்து அதன் கருத்து வெளியாகி உள்ளது.

இந்த மசோதாவில் என்னென்ன மாற்றங்களை இந்தியா செய்ய முடியும் என்பது பற்றி அதனுடன் பேசி வருகிறோம் என்று குரோலி தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே நிறைவேறியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு முழுமையாக அமலுக்கு வரவேண்டும் என்றால் அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா நிறைவேற்றம் அவசியம். அதன் அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அணு விபத்து ஏற்படும்போது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் நஷ்ட ஈடு அளவுக்கு நிகராக இந்தியாவிலும் தரவேண்டும் என இந்தியா வற்புறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக பேசி மாற்று யோசனைகளை பரிசீலிக்கவும் இந்தியா தயாராக உள்ளது. இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள இந்த மசோதா தொடர்பாக ஒபாமா நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகளும் அணு சக்தித் துறை சம்பந்தப்பட்ட தொழில் துறையினரும் வியப்பும் வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

அணு விபத்து நஷ்டஈட்டு மசோதா அமெரிக்க தொழில் துறையினருக்கு எதிரானதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இந்த மசோதா, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு மசோதாவையே குழிதோண்டி புதைத்து விடக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார் தெற்காசிய விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அமெரிக்க வல்லுநர் ஒருவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணு விபத்து நஷ்டஈடு மசோதா மீது அமெரிக்க தொழிற்துறையினர் அதிருப்தி"

கருத்துரையிடுக