26 செப்., 2010

95% வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றவை

சென்னை,செப்.26:நீதிமன்றங்களில் உள்ள 95 சதவீத வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றவையாக உள்ளன என்று உச்ச நீதிமன்ற நீதிபதியும், சமரச தீர்வு மைய திட்டக் குழுவின் தலைவருமான ஆர்.வி.ரவீந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் சார்பில் ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

சமரசம் செய்யும் அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம், நெகிழ்வுத்தன்மை இல்லாதது, நம்பகத்தன்மை இல்லாதது, அதிக செலவு, சட்ட அமலாக்கலில் உள்ள வேறுபாடு, நட்பு ரீதியில்லாத அணுகுமுறை ஆகிய 6 காரணங்கள் சாமான்ய மக்களை நீதித்துறையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.

நீதிபதிகளுக்காக நீதிமன்றங்கள் கிடையாது. அவை பொது மக்களுக்கானது. எனவே, பொதுமக்களுக்கான நீதி, விரைந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குற்ற வழக்குகளில் 5 முதல் 20 ஆண்டுகளுக்குப் பின்னரே இறுதி தீர்ப்பு கிடைக்கிறது. வழக்கு விசாரணையை தள்ளி வைப்பது என்பது, அந்த மனுதாரர்களுக்கு காலதாமதமாகிறது என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்.

10 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு கிடைத்தாலும், அதைச் செயல்படுத்த 10 ஆண்டுகள் ஆகிறது என்கிற நிலைமையே இப்போதும் நிலவுகிறது. நீதிமன்றம் என்பது பொதுமக்களுடன் நட்பு ரீதியான அணுகுமுறையுடன் இருக்க வேண்டும்.

குற்ற நடவடிக்கை, மோசடி, தேர்தல், நிர்வாக குளறுபடி வழக்குகளை விசாரிப்பதில் அர்த்தம் உள்ளது. ஆனால், காசோலை முறைகேடு, குடும்பத் தகராறு, சாலை விபத்து என பல்வேறு வழக்குகளையும் விசாரிக்க வேண்டி உள்ளது.

நீதிமன்றங்களில் உள்ள 95 சதவீத வழக்குகள், கீழ் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றவையாக உள்ளன. மேலும் உச்ச நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள், உயர் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றதாக உள்ளன.

சமரசத் தீர்வு மையத்தை மாற்று விசாரணையாக அங்கீகரிக்க தேசிய திட்டம் வகுக்கப்பட வேண்டும். அந்த திட்டம் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

சமரசத் தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த மையங்களுக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சமரசத் தீர்வாளர்கள் பதிவு செய்தல் மற்றும் சமரச மையங்களை நடத்துதல், சமரச அதிகாரிகளின் நன்னடத்தை மற்றும் ஒழுக்கம் உள்ளிட்டவை குறித்து போதிய விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றார் ரவீந்திரன்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பேசுகையில், சிவில் வழக்குகள் விசாரணை முறை சட்டத்தில் உள்ள 89-வது பிரிவில் சில சந்தேகங்கள் உள்ளன. சமரச தீர்வு காண வேண்டிய அதிகாரிகள் முந்தைய நாளில் அந்த வழக்கு குறித்து படித்து ஆய்வு செய்து, என்ன பிரச்னை எனக் கண்டறிந்து தீர்ப்பு அளித்திட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு சமரச தீர்வு மையத்தின் தலைவர் நீதிபதி சி.நாகப்பன், உறுப்பினர் நீதிபதி வி.தனபாலன் உள்ளிட்டோர் பேசினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "95% வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றவை"

கருத்துரையிடுக