13 செப்., 2010

மும்பை தாக்குதல் விவகாரம்: சல்மான் கருத்துக்கு சிவசேனை கண்டனம்

மும்பை,செப்.13:மும்பை தாக்குதலில் பணக்காரர்கள் பாதிக்கப்பட்டதாலேயே அந்த சம்பவம் பெரிதுபடுத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு நடிகர் சல்மான் கான் பேட்டி அளித்திருப்பதை சிவசேனை கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் "எக்ஸ்பிரஸ் 24/7' தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியின் முன்னோட்டம் இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில், சர்ச்சைக்குரிய வகையில் சல்மான் கான் கருத்து தெரிவித்திருப்பதால் பாரதிய ஜனதா, சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

"மும்பை தாக்குதலின்போது பணக்காரர்கள் தங்கியிருந்த தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் அந்த சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டது. பயணிகள் ரயில்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டபோது அவை பெரிதாகப் பேசப்படவில்லை.' என்று சல்மான் கான் பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டிக்கு சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் அம்பானி தங்கியிருக்கவில்லை. டாடாவும், பிர்லாவும் காமா லேன் பகுதியில் இருக்க மாட்டார்கள். அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அனைத்து தரப்பினரும் கண்டித்தனர். தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் அது குறித்து அதிகமாகப் பேசப்படுகிறது என்று சல்மான் கான் கூறியிருப்பது கேலிக்கூத்தானது.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந் நிலையில், தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலுக்கு சல்மான் கான் பேட்டியளித்தது ஏன். இந்த பேட்டி குறித்து சல்மான் கான் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்' என்று சஞ்சய் ரௌத் கூறியுள்ளார்.

இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணிடம் கேட்டபோது, சல்மான் கான் பேட்டி குறித்த விவரம் எனக்குத் தெரியாது, எனினும் மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது ஊரறிந்த உண்மை, இதில் யாருடைய கருத்தும் தேவையில்லை என்றார்.

மும்பை தாக்குதல் வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் உஜ்ஜல் நிகாம் கூறும்போது, சல்மான் கானின் கருத்து குழந்தைத்தனமாக உள்ளது, பயங்கரவாதிகளுக்கு ஏழை, பணக்காரர் வித்தியாசம் கிடையாது, அவர்களது தாக்குதல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிரானது என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மும்பை தாக்குதல் விவகாரம்: சல்மான் கருத்துக்கு சிவசேனை கண்டனம்"

கருத்துரையிடுக