4 செப்., 2010

கஷ்மீர் பகுதியில் சீன ராணுவமா? இந்தியா கடும் ஆட்சேபம்- மறுப்பு தெரிவித்த சீனா

டெல்லி,செப்.4:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கஷ்மீரைச் சேர்ந்த கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சுமார் 11 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது எனவும் அவர்களை சாலை அமைக்கவும் ரயில் பாதை பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 28 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஏற்கெனவே எல்லைப் பகுதியில் அத்துமீறிய நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள சீனா ஏதோ முடிவுக்கு வந்துவிட்டதாக இந்தியா நினைத்தது.

இதையடுத்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் அவசரக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டினார்.

இந்தக் கூட்டத்தில் சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கரும் கலந்து கொண்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா படையை குவித்துள்ளதா என்பது குறித்து பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் படைகள் இருப்பதாக வெளியான செய்தி குறித்து இந்தியாவின் கவலையையும், ஆட்சேபத்தையும் அந்நாட்டிடம் தெரிவிக்குமாறு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து சீனா சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் ஷாங் ஜிஜுனை சந்தித்து இந்திய தரப்பிலான ஆட்சேபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் கில்ஜித் பகுதியில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் திட்டத்தில் வெளியிடப்படுபவை என அந்த நாடு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

கில்ஜித் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் ஆதாரமில்லாதவை. கற்பனை கலந்து இத்தகைய செய்திகளை பரப்பும் விஷம சக்திகளின் நோக்கம் சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான உறவை சீர்குலைப்பதாகும். ஆனால் இந்த திட்டம் பலிக்காது என்றும் அந்நாடு ஏற்கெனவே உறுதியாக கூறியுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சீனாவின் மனிதாபிமானக் குழுவினரே உதவி வருகின்றனர் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் பகுதியில் சீன ராணுவமா? இந்தியா கடும் ஆட்சேபம்- மறுப்பு தெரிவித்த சீனா"

கருத்துரையிடுக