22 செப்., 2010

கஷ்மீர்:அனைத்துக்கட்சிக் குழுவின் நோக்கம் வெற்றி பெறுமா?

மூன்று தினங்களாக ஊரடங்கு உத்தரவு நிலவும் கஷ்மீர் சூழலில் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக் குழுவினர் கஷ்மீர் போராட்டக்காரர்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தை எவ்வளவு தூரம் வெற்றிபெறும் என்பதில் கவலைகளும், சந்தேகங்களும் எழுகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் கஷ்மீர் சென்றுள்ள அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு சில செப்பிடி வித்தைகளைக் காட்டி திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன.

கஷ்மீரின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வழித்தெரியாமல் திக்குமுக்காடும் தகுதியற்ற உமர் அப்துல்லாஹ்வின் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான அப்துற்றஹீம் ராத்தோர், மத்திய குழுவின் வருகையினால் உடனடி பலன்களை எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியிருப்பது ஒரு அறிகுறியாகும்.

1948 ஆம் ஆண்டு கஷ்மீரிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி சுயாட்சியை அனுமதிப்பதும், சிறப்பு ஆயுதச்சட்டம் போன்ற கருப்புச் சட்டங்களை கஷ்மீரிலிருந்து விலக்கவேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சியே கோரியுள்ளது. இத்தகையதொரு விட்டுக்கொடுத்தலுக்கு மத்திய அரசு தயாராகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உள்துறை அமைச்சகத்தில் வலதுசாரி தீவிரவாதிகளுக்கு பரவலான ஆதிக்கம் உள்ளது. பாதுகாப்புப் படையினரை கட்டவிழ்த்துவிடும் சட்டங்களை நியாயப்படுத்த ஜனநாயக நடைமுறைக்கு மாற்றமாக ராணுவத் தளபதிகள் பகிரங்கமாக கருத்துத் தெரிவித்ததற்கு காரணம் இத்தகைய வலதுசாரி சக்திகளின் நரித்தனமாகும்.

ஹுர்ரியத்தின் மிதவாத தலைவராக கருதப்படும் மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக்கும், ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாசீன் மாலிக்கும், பேச்சுவார்த்தை பயன் தரத்தக்க வகையில் அமையவேண்டும் எனவும், கஷ்மீர் மக்களின் விருப்பங்களை கருத்தில் கொள்ளாத எவ்வித முயற்சியும் வீணானது என சுட்டிக் காட்டியுள்ளனர்.

பிரபல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், கஷ்மீர் தலைவர்களும் இணைந்து ஒரு கஷ்மீர் கமிட்டியை உருவாக்கவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி கஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்ற வாதத்தில் உறுதியாக இருக்கிறார். இரண்டுமாத காலமாக கஷ்மீரில் நடைபெறும் கொந்தளிப்பிற்கு காரணம் கிலானியின் நிலைப்பாட்டோடு பிற அமைப்புகள் இணங்கி வருகின்றன என்பதாகும்.

பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களும், மனித உரிமை மீறல்களும்தான் கஷ்மீரில் இளைய தலைமுறையினரை இந்தியாவுக்கு எதிரானவர்களாக மாற்றியுள்ளது என்பதற்கு முக்கிய காரணமாகும்.

ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் பங்கர்களும், செக் போஸ்டுகளும் நிறுவி போலியான என்கவுண்டர்கள் மூலம் உருவாக்க நினைக்கும் அமைதி தங்களுக்கு தேவையில்லை என கஷ்மீர் இளைஞர்கள் பிரகடனப்படுத்துகின்றனர்.

கஷ்மீரில் நடக்கும் போராட்டங்கள் முற்றிலும் ஜனநாயக ரீதியிலான மக்கள் திரள் போராட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். சிறப்பு ஆயுதச்சட்டத்தை வாபஸ்பெற மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு இதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.

மீர்வாய்ஸ் ஃபாரூக் கூறியதை மீண்டு நினைவூட்டுகிறோம்- கஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாற்றமான எந்த முயற்சியும் வீணானதே! இதனை மத்திய அரசு உணர்ந்து கொண்டால் நல்லது!
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:அனைத்துக்கட்சிக் குழுவின் நோக்கம் வெற்றி பெறுமா?"

கருத்துரையிடுக