14 செப்., 2010

துருக்கி:விருப்ப வாக்கெடுப்பு உர்துகானுக்கு வலுச்சேர்க்கும்

அங்காரா,செப்.14:அரசியல் சட்டத் திருத்தத்திற்கு மக்கள் விருப்பத்தை அறியும் நோக்கில் நடத்தப்பட்ட விருப்ப வாக்கெடுப்பில் ஆதரவு கிடைத்தது பொது தேர்தல் நடக்கவிருக்கும் துருக்கியில் பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகானுக்கு உதவிகரமாகயிருக்கும் என கருதப்படுகிறது.

ராணுவத்தின் அதிகாரங்களை குறைப்பது, துருக்கியை மேலும் ஜனநாயகநாடாக மாற்றுவது போன்ற நோக்கத்துடன் அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு துருக்கி உர்துகான் அரசு விரும்புகிறது. இதற்காக நடத்தப்பட்ட விருப்ப வாக்கெடுப்பில்தான் 58 சதவீதம் பேர் மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 1980 ஆம் ஆண்டில் ராணுவம் உருவாக்கிய அரசியல் சட்டத்தை திருத்தி எழுதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது உருதுகானுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் விருப்ப வாக்கெடுப்பை அமெரிக்காவும், ஐரோப்பியன் யூனியனும் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உருதுகானை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியன் யூனியனில் உறுப்பினராக சேர காத்திருக்கும் துருக்கிக்கு அரசியல் சட்டத்திருத்தம் உதவிகரமாக மாறும். அரசியல் சட்டத்தில் 26 திருத்தங்கள் செய்யப்படும். இவற்றில், நாட்டில் உயர் நீதிபதிகளை நியமனம் செய்வதில் பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், ராணுவ அதிகாரிகளை குடியுரிமை நீதிமன்றங்களில் விசாரிக்க அனுமதியளித்தல் உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் முடிவு தேசத்தின் ஜனநாயக செயல்பாட்டை மேலும் சிறப்படையச் செய்யும் வரலாற்று ரீதியான நிகழ்வு என உருதுகான் சிறப்பித்துக் கூறினார்.

மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் முடிவு ஆதரவாக மாறியுள்ளதால் ஆளுங்கட்சியான எ.கெ பார்டி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

முஸ்தபா கமாலின் மதவிரோத கொள்கைகளின் பாதுகாவலராக செயல்படும் துருக்கியின் நீதிமன்றங்களுடன் போராட்டம் நடத்தித்தான் உருதுகானின் கட்சி ஆட்சியை பிடித்தது.

இதற்கிடையே உருதுகானுக்கெதிராக ஏராளமான சதித் திட்டங்களும், கவிழ்ப்பு முயற்சிகளும் அரங்கேறின. ஆனால், இவற்றையெல்லாம் முறியடித்து உர்துகான் துருக்கியின் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துருக்கி:விருப்ப வாக்கெடுப்பு உர்துகானுக்கு வலுச்சேர்க்கும்"

கருத்துரையிடுக