
ஒரிசா மாநிலம் சாண்டிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஐடிஆர் 3-வது பரிசோதனை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.35 மணிக்கு இந்த அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இதுகுறித்து ராணுவ அமைப்புகளில் ஒன்றான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டு குறிப்பிட்ட இலக்கைத் தாக்கியது. இது வழக்கமாக செய்து பார்க்கப்படும் சோதனைதான். இந்த வகை ஏவுகணை ஒலியைக் காட்டிலும் 2.8 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும். 300 கிலோ எடையுள்ள பொருளை சுமந்து செல்லும் ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறனுடையது. இந்த வகை ஏவுகணைகள் இப்போது தரையிலிருந்து ஏவப்படுகின்றன. விண்ணிலிருந்து செலுத்துவதற்கும், நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்துவதற்கும் வழிவகை செய்யும் வகையில் புதிய ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. ரஷியாவுடன் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.
பிரம்மோஸ்-2 வகை ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிப்பதற்காக இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பிரம்மோஸ்-1 வகை ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல பிரம்மோஸ்-1 வகை ஏவுகணை 2005-ம் ஆண்டிலேயே இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டு அனைத்து போர்க் கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "பிரம்மோஸ் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி"
கருத்துரையிடுக