24 செப்., 2010

காஸ்ஸா கப்பல் தாக்குதல் சட்டவிரோதம்: ஐ.நா

ஐ.நா.செப்.24:காஸ்ஸாவில் இஸ்ரேலின் தடையால் துயரத்தில் வாடும் ஃபலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசென்ற கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறியச் செயல் என ஐ.நாவின் மனித உரிமை கமிட்டியின் உண்மைக் கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.

ஒன்பது துருக்கி நாட்டவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் முன்பும், பிறகும் இஸ்ரேல் ராணுவம் நம்பமுடியாத அளவிலான கொடூரங்களை நிகழ்த்தியுள்ளது என ஐ.நா நியமித்த 3 உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று சமர்ப்பித்த விசாரணை
அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் தேதிதான் இஸ்ரேல் நிவாரணக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட கொலை மற்றும் சித்திரவதைக்கு இஸ்ரேலை விசாரணைச் செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா விசாரணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல் மனிதநேயமற்ற, மனித உரிமைக்குறித்த சர்வதேசச் சட்டங்களை மீறிய செயலாகும். கப்பல் பயணிகளுடன் இஸ்ரேலிய ராணுவத்தினரும் இதர அதிகாரிகளும் நடந்துக் கொண்டது சூழலுக்கு பொருத்தமற்ற செயலும் தேவையற்றதுமாகும்.

இவ்வறிக்கை வரும் திங்கள் கிழமை ஐ.நாவின் மனித உரிமைக் கமிட்டியில் விவாதிக்கப்படும். சுய பாதுகாப்பிற்கு வேண்டித்தான் தாங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுவதை விசாரணை அறிக்கை நிராகரித்துள்ளது.

ராணுவம் கப்பலில் நுழைவதை தடுக்காதவர்களும் கடுமையாக காயமுற்றதை விசாரணைக்குழு சுட்டிக்காட்டுகிறது.

ஆள்சேதத்தைக் குறைக்க எவ்வித முயற்சியும் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொள்ளவில்லை. பாரபட்சமான முறையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. குறைந்தது 6 பேருடைய கொலை சட்டவிரோதமாகும்.

ஆனால் இவ்வறிக்கை பாரபட்சமானது எனக்கூறி நிராகரித்துள்ளது இஸ்ரேல். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே தாங்கள் செயல்பட்டதாகவும், தடையை மீறும் முயற்சியை தடுப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் உண்டு என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு.

ஆனால், கடுமையான துயரத்தை அனுபவிக்கும் காஸ்ஸாவிற்கு தடையைத் தொடர்வது சட்டவிரோதம் என ஐ.நா கமிட்டி உறுதிப்படக் கூறியுள்ளது.

பிரிட்டன்,ஜோர்டான், துருக்கி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்துதான் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் விசாரணை அறிக்கையை ஹமாஸும், துருக்கியும் வரவேற்றுள்ளன. ஃபலஸ்தீன் பிரதேசங்களில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு சட்டவிரோதம் என விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டுவதாக ஹமாஸ் கூறியுள்ளது.

கப்பலில் நடந்த தாக்குதலுக்கு தலைமை வகித்த கமாண்டரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

விசாரணை அறிக்கை ஆதாரங்களின் அடிப்படையிலானது எனவும், தங்களுடைய எதிர்பார்ப்புக்கு உகந்தது எனவும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு நியூயார்க்கில் தெரிவித்தார்.

முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்ல் ஹட்ஸன் ஃபிலிப்ஸ்தான் ஐ.நா விசாரணை கமிட்டியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸா கப்பல் தாக்குதல் சட்டவிரோதம்: ஐ.நா"

கருத்துரையிடுக