19 செப்., 2010

விநாயகர் சிலை வைப்பதில் தகராறு: இந்து முன்னணி பிரமுகர் கொலை

சென்னை,செப்.19:விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இந்து முன்னணி தொண்டர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை நெற்குன்றம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரபாகரன் (25). இந்து முன்னணி தொண்டரான இவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி நெற்குன்றம் திருமலை நகரில் 5 அடி உயர விநாயகர் சிலை ஒன்றை வைத்தார்.

இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு இந்து முன்னணி தொண்டரான காண்டீபன் (30) என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது தந்தைதான் வழக்கமாக இந்த இடத்தில் விநாயகர் சிலை வைப்பார் என்பதால், பிரபாகரன் அங்கு சிலை வைக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இந்து முன்னணி பிரமுகர்கள் தலையீட்டு இருவருக்கும் சமரசம் செய்து வைத்தனர்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன் சின்மயா நகர் காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற பிரபாகரனை காண்டீபன், அவரது நண்பர்கள் பாண்டியன், சதீஷ், செந்தில், ஈஸ்வரன் ஆகியோர் வழிமறித்து அடித்து உடைத்தனர்.

பீர் பாட்டிலால் பிரபாகரின் கழுத்து, தலை, வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபாகரன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பான கோயம்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து பாண்டியன், சதீஷ், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பிரபாகரன் இறந்தார்.

இதையடுத்து இன்று ஈஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.முக்கிய குற்றவாளியான காண்டீபன் தலைமறைவாகிவிட்டார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விநாயகர் சிலை வைப்பதில் தகராறு: இந்து முன்னணி பிரமுகர் கொலை"

கருத்துரையிடுக