16 செப்., 2010

ஆஃப்கனில் போதை கடத்தலில் ஈடுபடும் இங்கிலாந்து, கனடா வீரர்கள்

லண்டன்,செப்.16:ஆஃப்கானிஸ்தானில் 'அமைதியை' நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் கனடாவைச் சேர்ந்த வீரர்கள் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தி சண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி.. 'ஹெல்மாண்ட் மாகாணம், கேம்ப் பாஸ்டியனில் நிலை கொண்டுள்ள இங்கிலாந்து வீரர்களும், காந்தஹார் விமான நிலையத்தில் நிலை கொண்டுள்ள கனடா நாட்டு வீரர்களும் இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த இரு இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள்தான் ஆஃப்கானிஸ்தானின் முக்கிய விமானப் போக்குவரத்து தளமாக உள்ளது. இந்த விமான நிலையங்களைத்தான் நேட்டோ படையினர் போக, வர பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து வீரர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இங்கிலாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த செய்திக்கு உரிய ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட இது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு என்பதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்திலும், ஆப்கானிஸ்தானிலும் பணியில் உள்ள வீரர்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தலில் யாராவது ஈடுபட்டிருப்பது உறுதியாகத் தெரிந்தால் அவர்கள் கடுமையான விசாரணை மற்றும் தணடனையை அனுபவிக்க நேரிடும் என்றார்.

ஆனால் தனது நாட்டு வீரர்கள் மீதான குற்றச்சாட்டை கனடா தேசிய பாதுகாப்புத் துறை மறுத்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் கியரி கூறுகையில், "காந்தஹாரில் நிலை கொண்டுள்ள ராணுவப் போலீஸாரும் சரி, ராணுவத்தினரும் சரி, எந்த வகையான தவறிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். விசாரணை தேவை என்று தோன்றினால் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்றார்."

ஆஃப்கானிஸ்தான் போதைப் பொருளுக்குப் பெயர் போனது. குறிப்பாக அங்கு ஓபியம் விளைச்சல் கிட்டத்தட்ட விவசாயம் போலவே உள்ளது. ஆனால் 2001ம் ஆண்டு வாக்கில் ஓபியம் விளைச்சல் குறைவாகவே இருந்தது. இந்த ஓபியத்திலிருந்துதான் ஹெராயின் பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2001க்குப் பிறகு அதாவது அமெரிக்கா தலைமையில் நேட்டோ படையினர் ஆஃப்கானிஸ்தானுக்குள் ஊடுறுவிய பின்னர் அங்கு ஓபியம் உற்பத்தி கிடுகிடுவென அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் போதைப் பொருள் ஏஜென்ட் ஒருவர் ஈரானின் பிரஸ் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், வெளிநாடுகளைச் சேர்ந்த போதைப் பொருள் முதலைகளுக்குப் பிறகு அதிக அளவில் ஓபியம், ஹெராயின் உள்ளிட்டவற்றை வாங்குவது ஆஃப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு ராணுவத்தினர்தான்.

அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்பு பெருமளவிலான போதைப் பொருளை வாங்கி அனுப்பி விட வேண்டும் என அவர்கள் தீவிரமாக உள்ளனர் என்றார்.

உலக அளவில் உள்ள ஹெராயினில் 90 சதவீதம் ஆஃப்கானிஸ்தானில்தான் உற்பத்தியாகிறது என்பது போனஸ் தகவல்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கனில் போதை கடத்தலில் ஈடுபடும் இங்கிலாந்து, கனடா வீரர்கள்"

கருத்துரையிடுக