18 செப்., 2010

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பாதி பேர் ஊழல்வாதிகள்: முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் பகிரங்க புகார்

புதுடெல்லி,செப்.:உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்த 16 பேரில் 8 பேர் ஊழலில் தொடர்புடையவர்கள் என்று முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான சாந்தி பூஷண் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இத்தகவலை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சாந்தி பூஷண் தெரிவித்துள்ளார்.

சாந்தி பூஷனின் மகனும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தெஹல்கா பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அதில் உச்ச நீதிமன்றத்தில் கடைசியாக தலைமை நீதிபதிகளாக இருந்த 16 நீதிபதிகளில் பாதி பேர் ஊழலில் தொடர்புடையவர்கள் என்று தெரிவித்திருந்தார்.

தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோரின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் முன்னாள் தலைமை நீதிபதிகள் இருவர், தங்களுக்கு முன்னும் பின்னும் நீதிபதிகளாக இருந்தவர்களின் விவரங்களையும் அவர்களின் ஊழல்களையும் தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக கட்டுரை வாயிலாக அவர் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போது தன்னையும் பிரதிவாதியாக சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சாந்தி பூஷண் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், பிரசாந்த் பூஷண் தெரிவித்த தகவல்கள் மிகவும் சரியானவை. அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. கடைசியாக இருந்த 16 நீதிபதிகளில் 8 பேர் ஊழலில் தொடர்புடையவர்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய 8 பேரில் 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். மீதி 2 பேரை நேர்மையானவர்களாகவோ அல்லது ஊழல்வாதிகளாகவோ திட்டவட்டமாகக் கூறமுடியாது. அவர்கள் மீது உறுதியான கருத்து எதையும் கூறமுடியாது. அவர்கள் யார், யார் என்ற விவரத்தை சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிபதிகளிடம் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இந்திய மக்களுக்காக நீதித்துறை நேர்மையாகவும், நியாயமாகவும், கெளரமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த புகாரை ஆதாரத்துடன் அளித்துள்ளேன். நான் தெரிவித்த தகவல்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானதாக கருதப்பட்டால் அதற்காக என்னை சிறையில் அடைத்தாலும் அதை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

இந்த வழக்கினால் நீதித்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேள்வி எழுந்தால், நான் அளித்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேர்வு செய்யும் குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு நீதிபதிகளோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் இந்த வழக்கில் முழுமூச்சுடன் செயல்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்" என்றும் சாந்தி பூஷண் தெரிவித்தார்.

சாந்தி பூஷண் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 முன்னாள் தலைமை நீதிபதிகள் வருமாறு: ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், எம்.எச்.கனியா, எல்.எம்.சர்மா, எம்.என். வெங்கடாசலய்யா, ஏ.எம்.அகமதி, ஜே.எஸ்.வர்மா, எம்.எம்.புஞ்சி, ஏ.எஸ்.ஆனந்த், எஸ்.பி.பரூச்சா, பி.என்.கிர்பால், ஜி.பி.பட்நாயக், ராஜேந்திர பாபு, ஆர்.சி.லகோத்தி, வி.என்.கரே மற்றும் ஒய்.கே.சபர்வால்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977 முதல் 79-ம் ஆண்டு வரை சட்ட அமைச்சராக இருந்தவர் சாந்தி பூஷண். அவரும் அவருடைய மகன் பிரசாந்த் பூஷணும் நீதித்துறையில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பாதி பேர் ஊழல்வாதிகள்: முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண் பகிரங்க புகார்"

கருத்துரையிடுக