அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.தேசத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிச்செய்ய வேலை இழப்பு தவிர்க்க முடியாதது என பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நல்வாழ்வுத்துறை,போலீஸ் துறை ஆகியவற்றில் செலவுகள் வெட்டிக் குறைக்கப்படும். ஓய்வு பெறும் காலக்கட்டத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரியிலும், வீட்டுக் கடனிலும் மாற்றம் செய்யப்படும்.
புதிய கொள்கையின் விபரங்கள் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீர்திருத்தம், வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஓஸ்போன் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு முடிவடையும் பொழுது 13000 கோடி டாலர் செலவுகள் வெட்டிக் குறைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. துறை சார்ந்த பட்ஜெட்டுகளில் 19 சதவீதம் குறைவு ஏற்படுத்தப்படும். நல்வாழ்வு திட்ட பட்ஜெட்டில் 700 கோடி டாலர் சேமிக்க இயலும் என ஓஸ்போன் தெரிவித்தார்.
அடுத்த 5 வருடங்களில் உள்நாட்டு தயாரிப்புகளில் தற்போதைய 11 சதவீத குறைப்பாட்டை 2 சதவீதமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் பொதுத்துறையில் அரசு 2550 கோடி டாலர் செலவழித்ததாக தகவல்கள் கூறுகின்றன.இதனைத் தொடர்ந்துதான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் மேற்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைதான் இது.
வேலைவாய்ப்புகளை குறைப்பதற்கு எதிராக லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் நகரங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைப்பெற்றன.
பொருளாதாரத்துறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமானது எனவும், தற்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் அது எதிர்காலத்திற்கு செய்யும் தண்டனையாகும் எனவும் பொருளாதார வல்லுநரான ரூத் லீ தெரிவித்தார்.
ஆனால், புதிய நடவடிக்கை நாட்டை பொருளாதார நெருக்கடியை நோக்கி அழைத்துச் செல்லும் என சில பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கன்ஸர்வேடிவ்-லிபரல் டெமோக்ரேடிக் முன்னணி ஆட்சியில் அமர்ந்த பொழுதுதான் நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி செல்வதாக எதிர்கட்சியான லேபர் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
நிதி ரீதியிலான கட்டுப்பாட்டை அரசு பேண வேண்டுமென அக்கட்சியின் பொருளாதார விவகாரங்களுக்கான செய்தித் தொடர்பாளர் அலன் ஜான்சன் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கடன் சுமை:பிரிட்டனில் 5 லட்சம் பேருக்கு வேலை 'கட்'"
கருத்துரையிடுக