20 அக்., 2010

செச்னியாவில் போருக்கு முற்றுப்புள்ளி இல்லை!

குரோஸ்னி,அக்.20:2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செச்னியாவில் யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும், போராளிகளை அழித்தொழித்ததாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்த போதிலும், அங்கு சுதந்திர தாகத்திற்கான போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தான் அங்கு நிகழும்
சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

200 வருடங்களுக்கு மேலாக தொடரும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் செச்னியா என்ற தேசத்தை உருக்குலைப்பதற்கு உதவினாலும், முற்றிலும் அந்த தேசத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது என்பதைத்தான் அங்கு நடைப்பெற்றுள்ள புதிய தாக்குதல்
நமக்கு உணர்த்துகிறது.

செச்னியா பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நேற்று இரண்டு போலீசாரும், ஒரு அரசு அதிகாரியும் கொல்லப்பட்டனர்.

செச்னியாவின் போராட்டம் 400 வருடங்களுக்கு முன்பாக பின்னோக்கி சென்றாலும், புதிய போராட்டங்களின் துவக்கம் ரஷ்யாவின்
வீழ்ச்சிக்குப் பிறகுதான் ஆரம்பித்தன.

1991 ஆம் ஆண்டு வடக்கு காக்கஸஸின் எண்ணெய் வளமிக்க பகுதியான செச்னியா இதர ரஷ்ய மாநிலங்களைப் போலவேசுதந்திர நாடாக பிரகடனம் செய்தது.

சுதந்திர செச்னியாவின் முதல் அதிபராக ஜவ்ஹர் துதயேவ் பதவியேற்றார். ஆனால், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸின் இதனைஅங்கீகரிக்க மறுத்துவிட்டார். 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவம் செச்னியாவிற்கு எதிராக ராணுவ நடவடிக்கையை துவக்கியது. ஆனால், மிகப்பெரிய ராணுவ பலமும், நவீன ஆயுத பலமும், விமானப்படையும் கொண்ட ரஷ்யாவால் செச்னிய மக்களின் சுதந்திரத்திற்கான வீரியமிக்க போராட்டத்திற்கு முன்பு மண்டியிட நேர்ந்தது.

1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ரஷ்ய ராணுவம் செச்னியாவிலிருந்து வாபஸ் பெற்றது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு காக்கஸஸின் மீதான மோகத்தை ரஷ்யாவால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

1999 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி ரஷ்ய ராணுவம் செச்னியாவின் மீது தாக்குதலைத் துவக்கியது. அஸ்லன் மஸ்கடோவ், ஷாமில் பஷயேவ், அஹ்மத் பகயேவ் போன்ற போராளி தலைவர்களையெல்லாம் பல்வேறு காலக் கட்டங்களில் ரஷ்ய ராணுவமும், உளவுத்துறையும் சதித்திட்டம் தீட்டி கொலைச் செய்தன.

லட்சக்கணக்கான செச்னிய மக்களை கொன்றொழித்து விட்டு தனது ஆதிக்கத்தை செச்னியாவின் மீது நிலைநாட்டியது ரஷ்யா. ஏகாதிபத்திய வெறி கொண்ட ரஷ்யாவினால் அழிக்கப்பட்ட செச்னிய மக்களின் எண்ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையில் பத்தில் ஒரு பகுதியாகும்.

2009 ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் பொம்மை ஆட்சியாளரான ரம்ஸான் கதிரோவ் அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர் பெரியதொரு போராட்டம் ரஷ்யாவிற்கெதிராக நடத்தப்படாவிட்டாலும் கூட சிறிய அளவிலான தாக்குதல்கள் செச்னிய மக்களின் சுதந்திரதாகத்தை முடக்கிவிடவில்லை என்பதை தெளிவுப்படுத்துகின்றன.

மூன்றில் ஒரு பகுதி மக்களை கொன்றொழித்து மீதியுள்ளவர்களை நாட்டைவிட்டு துரத்திய ஜோசப் ஸ்டாலினால் சாதிக்க முடியாததா நவீன ரஷ்ய ஆட்சியாளர்களால் சாதிக்க முடியும்? என்றதொரு கேள்வி எழுகிறது.

இமாம் ஷாமில், இமாம் காஸிமுல்லாஹ் ஆகிய சான்றோர்களால் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட செச்னிய மக்களை அடிமைகளாக்கிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்பதுதான் உண்மை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "செச்னியாவில் போருக்கு முற்றுப்புள்ளி இல்லை!"

கருத்துரையிடுக