5 அக்., 2010

நெதர்லாந்து:முஸ்லீம்களுக்கு எதிரான கருத்து - எம்.பி.,யிடம் நீதிமன்றம் விசாரணை

ஆம்ஸ்டர்டேம்,அக்.5:நெதர்லாந்து எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் முஸ்லீம்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் குறித்து ஆம்ஸ்டர்டேம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டால் அவருக்கு அந்நாட்டுச் சட்டப்படி அதிகபட்சம் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். அவரது சுதந்திரக் கட்சி நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'டி வொல்ஸ்கிரான்ட்' என்னும் நாளிதழில் அவர் எழுதிய கட்டுரையில், "இந்த நாட்டில் ஏற்கெனவே போதிய எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ளனர். இனி ஒரு முஸ்லீமை கூட இந்த நாட்டில் அனுமதிக்கக் கூடாது. மேலும், நெதர்லாந்தில் குர்ஆனை தடை செய்ய வேண்டும்." என்று எழுதியிருந்தார்.

2008-ம் ஆண்டில் 'ஃபித்னா' என்ற பெயரில் இவர் வெளியிட்ட குறும்படத்தில் இடம்பெற்ற தற்கொலைப்படைத் தாக்குதல் காட்சிகளுக்கு குர்ஆன் வசனங்களை பயன்படுத்தியிருந்தார். மேலும் புனித குர்ஆனை ஹிட்லரின் சுயசரிதையான 'ய்ன் கம்ஃப்' உடன் ஒப்பிட்டு மேலும் சர்ச்சைகளை உருவாக்கினார். இதனையடுத்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

கீர்ட் வில்டர்ஸ் நீதிமன்றம் வந்தபோது, அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்தார். இதனிடையே, அவருக்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அங்கு கலவரத் தடுப்புப் போலீஸார் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.

நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தில், "பொது விவாதத்திற்காக எனது கருத்தை நான் தொடர்ந்து வெளியிடுவேன். நான் உண்மையை பேசியதால் சந்தேகத்திற்குரிய நபராக இங்கு அமர்ந்துள்ளேன்." என்றார்.

பின்னர் நீதிபதிகளின் கேள்விகளுக்கு கீர்ட் வில்டர்ஸ் மவுனமாகவே இருந்தார் என்று அவரது வழக்கறிஞர் பிராம் மோஸ்கோவிகஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கை நீதிபதி மூர்ஸ் விசாரித்து வருகிறார். நவம்பர் 4-ம் தேதி தீர்ப்பு கூறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, டிவிட்டர் இணையதளத்தில், இன்றைய விசாரணைக்கு தான் நேரில் ஆஜராவது குறித்து "கொடூரமான நாள்" என்று வில்டர்ஸ் எழுதியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நெதர்லாந்து:முஸ்லீம்களுக்கு எதிரான கருத்து - எம்.பி.,யிடம் நீதிமன்றம் விசாரணை"

கருத்துரையிடுக