19 அக்., 2010

கர்நாடகா:அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி ரத்து வழக்கு: இரு நீதிபதிகளின்௦ மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்

பெங்களூர்,அக்.19:கர்நாடக பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால், அந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேரின் எம்எல்ஏ பதவியையும் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் எம்எல்ஏ பதவியையும் ரத்து செய்து அக்டோபர் 11-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் கே.ஜி.போப்பையா உத்தரவிட்டார்.

பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேரும், 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். சுயேச்சை எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை தனி வழக்காகவும், 11 அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் தாக்கல் செய்திருந்த மனுவை தனி வழக்காகவும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் ஹேகர், நீதிபதி என். குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.

இந்த இரு வழக்குகளிலும் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை நீதிபதி ஜகதீஷ்சிங், நீதிபதி என். குமார் ஆகியோர் வந்து இந்த இரு வழக்குகளிலும் தீர்ப்பு அளித்தனர். தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங், அப்போது நீதிமன்றத்தில் கூறுகையில்: 11 எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் சட்டப்பேரவைத் தலைவர் போப்பையா எடுத்த நடவடிக்கை சரியானது என்றார். நீதிபதி என்.குமார் கூறுகையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கை சரியல்ல. அவரது உத்தரவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

எனவே, இரு தீர்ப்புகளும் மாறுபட்டு உள்ளது. எனவே, இந்த 11 எம்எல்ஏக்கள் மனு மீது 3-வது நீதிபதி ஒருவர் விசாரணை வடதித உத்தரவிடுகிறேன். அந்த நீதிபதி அளிக்கும் தீர்ப்பு வந்த பிறகு எந்தத்தீர்ப்பு பெரும்பான்மையாக உள்ளது என்பதை பொருத்து இந்த வழக்கில் தீர்ப்பு அமையும். இந்த மனு மீது இன்னொரு நீதிபதி அக்டோபர் 20-ம் தேதி தனது விசாரணையைத் துவக்குவார் என்று தலைமை நீதிபதி கூறினார்.

அதுபோல் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் பதவி பறிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது எங்களது இருவரின் கருத்தாக உள்ளது. எனவே, அதன்படி சுயேச்சைகள் தாக்கல் செய்த மனு மீது நவம்பர் 2-ம் தேதி விசாரணையை டிவிஷன் பெஞ்ச் நடத்தும் என்றார்.

தீர்ப்பு குறித்து அரசு சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சத்யபால் ஜெயின் கூறியதாவது: பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்த பிரச்னையில், பேரவைத் தலைவர் போப்பையா எடுத்த நடவடிக்கையில் சட்டவிதிகள் மீறப்படவில்லை, சமூக நீதி கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

செயல்முறை மீறப்படவில்லை என்பதில் இரு நீதிபதிகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததில்தான் இரு நீதிபதிகள் கருத்தும் மாறுபட்டுள்ளது. முதல்வருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என 11 எம்எல்ஏக்களும் ஆளுநரை அணுகியது சரியானதா இல்லையா என்பதில் இரு நீதிபதிகளும் வேறுபட்டுள்ளனர். எனவே, 11 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியா இல்லையா என்பதை 3-வது நீதிபதி முடிவு செய்வார். அவரது தீர்ப்பே இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாகும் என்றார்.

கடந்த வாரம் 11 பேர் மீதான வழக்கில் விவாதம் நடந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடுகையில், 11 எம்எல்ஏக்களும் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தபோதே அவர்கள் பாஜகவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியவர்கள் ஆகிவிடுகிறார்கள். எனவே, இது கட்சிவிரோத நடவடிக்கையாகும் என்று வாதாடினர்.

5 சுயேச்சை எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், அக்டோபர் 14-ம் தேதி அரசு மீது நம்பிக்கைத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் எடியூரப்பா கொண்டுவந்து தனது ஆட்சிக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டிருந்தார். 16 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவை ஆளுநர் பிறப்பித்திருந்தார். இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 5 சுயேச்சை எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பில் தாங்களும் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை அக்டோபர் 13-ம் தேதி தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் ஹேகர், நீதிபதி குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ஆனால் அவர்கள் 5 பேர் மீதான வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, சட்டப்பேரவையில் நம்பிக்கைத் தீர்மானத்தில் நடைபெறும் வாக்கெடுப்பை கட்டுப்படுத்தும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், அக்டோபர் 14-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 106 வாக்குகளும் எதிராக 100 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 5 சுயேச்சைகளுக்கு சாதமாக தீர்ப்பு வந்திருந்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் 105 ஆக அதிகரித்திருக்கும். ஆனால், இன்னும் தீர்ப்பு அளிக்கப்படாமல் தள்ளிப்போகிறது.

திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டுவிடும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 பேரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தீர்ப்பின் திசையே மாறி, இன்னும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்நாடகா:அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி ரத்து வழக்கு: இரு நீதிபதிகளின்௦ மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்"

கருத்துரையிடுக