
கர்நாடக அரசியலில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இதனால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கோடிகோடியாக பணம் செலவழித்து தங்கள் பக்கம் இழுக்கிறது என்றும், இதுபற்றி மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் பெங்களூர், பெல்லாரி, ஹொசபேட்டை ஆகிய நகரங்களில் திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.
பெங்களூர், பெல்லாரி, பெல்லாரி மாவட்டம் ஹொசபேட்டை ஆகிய இடங்களில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அவரது சகோதரரும் வருவாய்த் துறை அமைச்சருமான கருணாகர ரெட்டி, இவர்களுக்கு மிகவும் நெருக்கமான எம்.எல்.ஏ.க்கள், வழக்கறிஞர், உதவியாளர்கள் ஆகியோருக்குச் சொந்தமாக உள்ள சுரங்க நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு பெங்களூரில் வசிக்கும் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்குச் சொந்தமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்க நிறுவன அலுவலகம், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஓபுலாபுரம் மைன்ஸ் என்ற பெயரில் ஜனார்த்தன ரெட்டி சுரங்க நிறுவனம் நடத்தி வருகிறார். அதில் அமைச்சர் கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனார்த்தன ரெட்டியின் வழக்கறிஞர் ராகவாச்சார்யா, அவரது உதவியாளர் அலிகான் ஆகியோருக்கு பெல்லாரி, ஹொசபேட்டையில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதுபோல் பெங்களூர் மற்றும் பெல்லாரியில் உள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நாகேந்திரா, சுரேஷ் பாபு ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், சட்டப் பேரவை உறுப்பினர் விடுதியில் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
ஜனார்த்தன ரெட்டியின் மற்றொரு சகோதரர் சோமசேகர ரெட்டிக்குச் சொந்தமான பெல்லாரி வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடந்தது. ரெட்டி சகோதரர்களின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான ஜிஜி மைன்ஸ், கொக்கே, ஐஎல்சி ஆகிய சுரங்க நிறுவனங்களிலும் இந்தச் சோதனை நடந்தது.
சோதனையின் போது சுரங்கத் தொழில் தொடர்பான கணக்கு விவரங்கள், பண பட்டுவாடா தொடர்பான புத்தகங்கள், கம்ப்யூட்டர் சி.டி.க்கள் ஆகியவற்றை வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர். அதுபோல் அதிக அளவில் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சோதனைகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வருமான வரித் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
0 கருத்துகள்: on "கர்நாடக அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் வீடுகளில் வருமானவரித்துறை திடீர் சோதனை"
கருத்துரையிடுக