12 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து மகாசபை 'கேவியட்' மனு

புதுடெல்லி,அக்.12:பாப்ரி மஸ்ஜித் பிரச்னை தொடர்பாக பாரத ஹிந்து மகாசபை உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் இடம் தொடர்பான வழக்கில், தங்களை விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படக் கூடாது என்று அந்த மனுவில் கோரியுள்ளது. இந்த வழக்கில் ஹிந்து மகாசபையும் ஒரு வழக்காளி.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டால், அந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, எங்கள் தரப்பு வாதங்களையும் விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஹிந்து மகாசபை கூறியுள்ளது.

இம்மனுவை ஹிந்து மகாசபை தேசியத் தலைவர் சுவாமி சக்கரபாணி தாக்கல் செய்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ஹிந்து மகாசபை, நிர்மோஹி அகாடா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய அமைப்புகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி தீர்ப்புக் கூறியது.

இந்த தீர்ப்பு குறித்து வழக்காளிகள் யாரும் திருப்தி தெரிவிக்கவில்லை. தீர்ப்புக் குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இந்த வழக்கில் தொடர்புடைய எல்லோருமே மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் சன்னி வக்ஃப் வாரியம், மேல்முறையீடு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்போது, தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று ஹிந்து மகாசபை மனு தாக்கல் செய்துள்ளது.

"அயோத்திப் பிரச்னையில் சமரச முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை. சட்டப்படியான தீர்வையே நாங்கள் விரும்புகிறோம்" என்று ஹிந்து மகாசபை தேசிய பொதுச் செயலாளர் இந்திரா திவாரி கூறினார்.

"நாங்கள் பிரம்மாண்ட அளவில் ராமர் கோயில் கட்டத் தீர்மானித்துள்ளோம். எனவே இதில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இதனால் சமரச முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. எந்தவொரு சமரச முயற்சிகளிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்றார் அவர்.

"இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரது ஒத்துழைப்புடன் எங்கள் (ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமான கோயில் கட்டும்?) லட்சியத்தை அடைவோம்" என்றார் அவர்.

இரண்டு நாள்களுக்கு முன்பே கேவியட் மனுவை ஹிந்து மகாசபை தாக்கல் செய்துவிட்டது. உச்ச நீதிமன்றம் மூலம் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்பதை வலியுறுத்திச் சொல்லவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று ஹிந்து மகாசபையின் உத்தரப் பிரதேச பிரிவு தலைவர் கமலேஷ் திவாரி கூறினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யும்பட்சத்தில் அந்த மனு மீது முடிவு எடுக்கும் முன் எங்களது தரப்பு நியாயங்களையும் கேட்க வேண்டும் என்பதற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார் அவர்.

அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பின் சான்று நகல் கிடைத்தப் பிறகே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். அக்டோபர் 20-தேதியிலிருந்து 25 தேதிக்குள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று கமலேஷ் கூறினார்.

இந்தப் பிரச்னையில் சமரச முயற்சி எதிலும் ஹிந்து மகாசபை ஈடுபடவில்லை. சமரச முயற்சி என்பது வெறும் நாடகம். இதுவரை இந்த வழக்கு சம்பந்தப்பட்ட மற்ற வழக்காளிகள் யாரும் எங்களை அணுகவில்லை. நாங்களும் யாரையும் அணுகவில்லை என்று அவர் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் ஹிந்து மகாசபை 'கேவியட்' மனு"

கருத்துரையிடுக