12 அக்., 2010

கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

பெங்களூர்,அக்.12:கர்நாடக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு விதிமுறைப்படி நடைபெறவில்லை என்பதால் பாஜக அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தப் பரிந்துரை மீது முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை மாலை கூடுகிறது.

நம்பிக்கை வாக்குகெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டதும், அதுபோல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முன்னரே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை பேரவைத் தலைவர் பதவிநீக்கம் செய்ததும் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சைக் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் பாஜக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் அக்டோபர் 6-ம் தேதி கடிதம் அளித்தனர். இதையடுத்து அக்டோபர் 12-க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் உத்தரவிட்டார். பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கள்கிழமை நடைபெறும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்தார். 19 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் எடியூரப்பாவை ஆதரிப்பதாக பின்னர் அறிவித்தனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சட்டப் பேரவை கூடும் முன்பே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை நீக்குவதாக பேரவைத் தலைவர் கே.ஜி.போப்பையா அறிவித்தார். மேலும் அந்த 16 பேரும் சட்டப் பேரவை வளாகத்துக்குள் நுழையவும் தடை விதித்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பேரவை கூடியது. பதவி பறிக்கப்பட்ட சுயேச்சை எம்எல்ஏக்கள் 5 பேர் அவைக்குள் வந்து அமர்ந்திருந்ததையடுத்து அவர்களை வெளியேற்ற காவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.

16 பேர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோதே நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் போப்பையா அறிவித்தார்.

இதை ஏற்காத எதிர்க்கட்சி தலைவர்கள் சித்தராமையா, குமாரசாமி, ரேவண்ணா மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து புகார் செய்தனர்.

பேரவையில் நடந்த அமளி குறித்து ஆளுநரிடம் விவரித்தனர். 16 பேரின் எம்எல்ஏ பதவியைப் பறித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியதாகவும், அதில் மேலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டு கையை உயர்த்தினர் என்றும் ஆளுநரிடம் கூறினர். அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரினர்.

இதையடுத்து அரசியல் சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதால் மாநில அரசைக் கலைக்குமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரத்வாஜ் பரிந்துரை செய்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை"

கருத்துரையிடுக