30 அக்., 2010

குண்டுவெடிப்பு வழக்குகளை மறு விசாரணைச் செய்யவேண்டும்

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துக் கொண்டிருக்கும் வேளையில் சங்க்பரிவாரத்தின் முகமூடிகளும் கழன்று வீழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

916 ஹால்மார்க் தேசப்பற்றிற்கு சொந்தக்காரர்களாகவும், கறைபடியாத தேசிய கலாச்சாரத்திற்கு ஏகாதிபத்திய உரிமைப் பெற்றிருந்த சங்க்பரிவார்கள் மீது முன்னர் இந்த தேசத்தை நடுக்கிய வெடிக்குண்டு சம்பவங்களின் போது சிறு சந்தேகம் கூட ஏற்படவில்லை.

இந்தியாவின் பன்முக சமூகக் கட்டமைப்பில் துவேசம் மற்றும் பழிவாங்கலின் புதியதொரு சரித்திரக் காலக்கட்டம் 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் பாசிச வெறியர்களால் வீழ்த்தப்பட்டப் பிறகு துவங்கியது.

பாப்ரியின் வீழ்ச்சிக்குப் பிறகு நாடு முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம் அரங்கேறியது. அதில் மிகவும் பாதிக்கப்பட்டது மும்பை மாநகரம்.

முஸ்லிம் சமூகம் ஆயிரக்கணக்கில் தெருக்களில் அநாதைப் பிணங்களாக்கப்பட்டனர். இந்த அக்கிரம நிகழ்வுகள் நடந்துமுடிந்து சிறிது காலக்கட்டத்திலேயே மும்பை குண்டுவெடிப்பு நிகழ்கிறது.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதிலும், மும்பைக் கலவரத்திலும் நம்பிக்கையிழந்த, கோபங்கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்தப்பட்டனர்.

பின்னர், மக்கள் நெரிசல் மிகுந்த அங்காடிகளிலும், ரெயில் வண்டிகளிலும் மனித உயிர்கள் பலியிடப்பட்ட பொழுது முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்ல சமுதாயமே வேட்டையாடப்பட்டது. நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களின் இரத்தத்தாலும், கண்ணீராலும் சிறை அறைகள் நிரம்பின.

குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் முதுகில் சிமி அல்லது ஹுஜி அமைப்பின் முத்திரைக் குத்தப்பட்டது.

இந்தியாவிற்கு விரோதமான செயல்கள் தொடர்ந்து நடந்து வந்ததால் தேசத்துரோகிகளுக்கும், பயங்கரவாதிகளுக்குமெதிராக படையெடுப்பதற்கு ஆதரவான சூழலாக மாற்றுவதற்கு சங்க்பரிவார்கள் கங்கணம் கட்டினர்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களுமான அப்பாவி பயணிகள் தீயில் வெந்து மரணித்த பொழுது, எல்லைக் கடந்த பயங்கரவாதம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

தங்களது சொந்த வழிப்பாட்டுத் தலங்களைக்கூட வெடிக்குண்டுகளால் தகர்க்கும் கொடூர மனங்களைக் கொண்டவர்களாக போலீசாராலும், ஊடகங்களாலும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சித்தரிக்கப்பட்டனர்.

மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஷெரீஃப் என முஸ்லிம்களின் மையங்களின் மீது தொடர்ந்து வெடிக்குண்டு தாக்குதல்கள் நடந்ததால் ஓரளவாவது அறிவைப் பெற்றிருந்த புலனாய்வு அதிகாரிகள் மாத்தி யோசிக்க ஆரம்பித்தனர்.

நேர்மைக்கும், துணிச்சலுக்கும் புகழ்பெற்ற, தீரமிக்க நடவடிக்கையினால் தனது உயிரை தியாகம் செய்த ஹேமந்த் கர்காரேயிடமிருந்து துவங்கிய உண்மைகளின் தொடர்ச்சி தற்பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைமை பீடத்தின் வேட்டியை உருவும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் எப்பொழுதும் கைதுச் செய்யப்படலாம். மர்மமான முறையில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சுனில் ஜோஷியின் மரணத்தின் தூதர்கள் சங்க்பரிவார்கள்தான் எனவும் புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கான சதித் திட்டத்தில் தொடர்பு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியிருக்கும் கர்னல் புரோகித் மற்றும் சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் வரை நீள்கிறது.

பல மாநிலங்களிடையே தொடர்புடைய பயங்கரவாதக் குணங்கொண்ட வழக்குகளைத்தான் என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரித்து வருகிறது.

1992 முதல் இந்தியாவில் நிகழ்ந்த அனைத்து குண்டுவெடிப்புகளைக் குறித்தும் அவற்றில் சங்க்பரிவார்களின் தொடர்புகள் குறித்தும் மறு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதுவரை பொய் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்து அவர்களுக்குரிய இழப்பீடுகளையும் வழங்கவேண்டும். இதுதான் மனிதநேயமிக்க இந்திய குடிமக்களின் விருப்பமாகும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குண்டுவெடிப்பு வழக்குகளை மறு விசாரணைச் செய்யவேண்டும்"

கருத்துரையிடுக