2 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் எதிரானது: செய்யத் ஷஹாபுத்தீன்

புதுடெல்லி,அக்.2:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சட்டவிரோதமும், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான செய்யத் ஷஹாபுத்தீன் கூறியுள்ளார்.

இதுக் குறித்து அவர் மேலும் கூறியதாவது: "அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஆச்சரியமளிக்கிறது. நேருக்கு நேர் அல்லாத தீர்ப்பு கொள்கைக் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆவணங்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு அளிக்காமல், கற்பனைக் கதைகளையும், ஐதீகங்களையும், மூட நம்பிக்கைகளையும் நீதிமன்றம் கருத்தில்கொண்டது.

நம்பிக்கைகளை விட சட்டங்களுக்குத்தான் நீதிமன்றங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆதலால், இது சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பாகும்.

1949 ஆம் ஆண்டின் முந்தைய சில ஆண்டுகளிலும், 1980 ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்தும் சங்க்பரிவார் அமைப்புகள் அரசியல் ஆதாயத்திற்காக முன்வைத்த கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கிறது இத்தீர்ப்பு.

முக்கிய விஷயங்களில் மூன்று நீதிபதிகளை உறுப்பினர்களாகக் கொண்ட பெஞ்ச் வேறுபட்ட தீர்ப்பைக் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

சர்ச்சைக்குரிய நிலத்தை பிரிக்கக் கூடாது என 1994 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலத்தின் தீர்ப்பிற்கு பிறகு மஸ்ஜிதோ அல்லது கோயிலோ கட்டவேண்டும் எனவும், நிலத்தின் உரிமையை இழக்கும் கட்சிதாரருக்கு சர்ச்சைக்குரிய நிலத்திற்கு வெளியே வழிப்பாட்டுஸ்தலம் அமைக்க வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு அளித்த வழிகாட்டுதலில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய நிலம் ராமஜென்ம பூமியா? என்பதுக் குறித்து கருத்துக்கூற மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

நிலத்தை பங்கீடுச் செய்யவேண்டும் என எந்தவொரு கட்சிதாரரும் கோரவில்லை. இவ்வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் பல இடங்களிலும் பாப்ரி மஸ்ஜிதில் இந்துக்களும், முஸ்லிம்களும் வழிபாடு நடத்தியிருந்தனர் என தவறான விமர்சனம் உள்ளது.

ஆவணங்களின் படி மூன்று மினாராக்கள் அமைந்திருந்த மேற்கூரையின் கீழே உள்ள ஹால் மற்றும் அதனோடு இணைந்திருந்த நடுமுற்றத்தில் நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் மட்டுமே வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்தனர். இதற்கு வெளியேயுள்ள இடத்தில்தான் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியிருந்தனர்.

1528 ஆம் ஆண்டு பாபரின் கட்டளையின் பேரில் மீர்பாஹி கட்டிய மஸ்ஜிதில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வரை முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றி வந்தனர் என்ற உண்மையை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது.

மேலும், நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயிலை இடித்துவிட்டுத்தான் மஸ்ஜித் ஒருவேளை கட்டப்பட்டிருந்தாலும் கூட, சொத்துரிமையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற சொத்துரிமைச் சட்டத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

மஸ்ஜிதிற்குள் சிலையைக் கொண்டு வைத்துவிட்டு உரிமைக் கோரினால் அது கிடைக்காது. ஃபைஸாபாத் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் அரசிற்கும் நீதிமன்றத்திற்கு அளித்த முக்கியத்துவம் வாய்ந்த சத்திய வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது." இவ்வாறு செய்யத் ஷஹாபுத்தீன் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:சட்டத்திற்கும் உச்சநீதிமன்ற உத்தரவிற்கும் எதிரானது: செய்யத் ஷஹாபுத்தீன்"

கருத்துரையிடுக