30 அக்., 2010

கருத்து சுதந்திரமும் தேசத் துரோகமும்

கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என டெல்லியில் நடந்த கருத்தரங்கில் உரை நிகழ்த்தியதற்காக பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய் மற்றும் தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கை பதிவுச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க இதுவரை வாபஸ் பெறவில்லை.

இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டால், கஷ்மீரில் மீண்டும் மோதல் உருவாகும் என பயந்து காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கையை எடுக்காதது ஆசுவாசமான செய்திதான்.

அதுமட்டுமல்ல, இக்கைது நடவடிக்கைகள் மூலமாக சர்வதேச அளவில் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்த எச்சரிக்கை உணர்வும் இவ்விவகாரத்தில் அவசரப்பட்டு எந்நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவிடக் கூடாது என மத்திய அரசு உணர்ந்திருக்கலாம்.

ஆனால், இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும், ஓரளவாவது காங்கிரஸும் வெளிப்படுத்தியது தேவையற்ற கவலையாகும். அவ்வளதூரம் பாரதூரமான கருத்துக்களையா அருந்ததியும், கிலானியும் வெளிப்படுத்திவிட்டனர்?

அருந்ததியைப் பொறுத்தவரை சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் அறிவுஜீவியாவார். இந்தியா கஷ்மீரை தன்னுடன் இணைத்ததுக் குறித்து மாறுபட்ட அபிப்ராயங்களைக் கொண்டோர் ஏராளமானோர் உள்ளனர்.

கஷ்மீர் தர்க்கப் பிரதேசம்தான் எனக் கருதுவோரும் உண்டு. கஷ்மீரில் ராணுவத்தின் பிரவேசம் மனித உரிமை மீறல் எனக் கருதுவோரும் அவர்களில் உண்டு.

கஷ்மீரிகள் இந்தியாவிலிருந்து சுதந்திரத்தைப் பெற விரும்புவதற்கு காரணம் இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள்தான் எனக் கருதுவோரும் உண்டு.

இத்தகையதொரு சூழலில்தான் அருந்ததிராய் தனது அபிப்ராயத்தை தெரிவித்தார். இத்தகையதொரு அபிப்ராய பிரகடனத்தை தேசத்துரோக குற்றமாக கருதி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124(எ) யின் படி பிரிவினையைத் தூண்டும் விரோத மனப்பாண்மைக் கொண்ட உரையை நிகழ்த்தினார் என குற்றஞ்சாட்டி அவருக்கெதிராக வழக்கு பதிவுச் செய்வது என்பது ஒரு ஜனநாயக நாட்டின் பாரம்பரியத்திற்கு உகந்ததல்ல.

அருந்ததிராயின் உரை எவ்விதத்திலும் பிரிவினையைத் தூண்டுவதோ, விரோத மனப்பாண்மைக் கொண்டதோ அல்ல.

கஷ்மீரில் தினந்தோறும் அதிகரித்துவரும் பிரச்சனை அதிகரித்து வருகிறதேயொழிய குறைந்தபாடில்லை. இப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு தேவை எனவும், ராணுவ நடவடிக்கைகள் மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும் எனவும் கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.

கஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமெனில், கஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். இதனைப் புரிந்துக்கொண்ட அருந்ததிராய் தனது அபிப்ராயத்தை வெளிப்படுத்தினார்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய நடுவர் குழுவின் நிலைப்பாடும் ஏறக்குறையை இதேதான். கஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பகுதி அல்ல இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பகுதி என்ற கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கூற்றும் கஷ்மீரிகளின் எண்ணங்களின் வெளிப்பாடாகும்.

இந்த எண்ணங்களைப் புரிந்துக்கொண்டு, அதற்கு உகந்த அரசியல் தீர்வு காண வேண்டும் என அருந்ததிராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனைப் புரிந்துக்கொள்ளாமல், தங்களது அபிப்ராயங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் கைதுச் செய்ய துணிவது தேசத்தின் பரந்து விரிந்த விருப்பங்களுக்கு எதிரானதாகும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கருத்து சுதந்திரமும் தேசத் துரோகமும்"

கருத்துரையிடுக