4 அக்., 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கோழிக்கோடு,அக்.4:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என கேரளமாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்ததும், அங்கு அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்டதும், 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் தெளிவாக தெரிந்த பிறகும் நிலத்தின் உரிமை யாருக்கு என்பதனை நிர்ணயிப்பதற்கு பதிலாக கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு மாதிரியில் சமரசத்தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

வரலாற்று உண்மைகளுக்கும், ஆதாரங்களுக்கும் மேலாக ஏதேனும் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவது இந்திய நீதித்துறையின் வரலாற்றில் இது முதல் தடவையாகும்.

ஒரு பிரிவினருக்கு சொந்தமான நிலத்தை நம்பிக்கையின் பெயரால் இன்னொரு பிரிவினர் சொந்தம் கொண்டாடினால் அதற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கியிருப்பது உலகில் எங்குமே இல்லாத நடைமுறையாகும். இவ்வழக்கில் அதுதான் நடந்துள்ளது.

சொத்து தகராறை நம்பிக்கை பிரச்சனையாக மாற்றுவது நீதித்துறையின் அந்தஸ்திற்கு உகந்ததல்ல. இது நீதித்துறையில் கடுமையான எதிர்விளைவுகளுக்கு வழிவகுப்பதாகும். சுதந்திரத்திற்கு முன்பு வழங்கப்பட்ட இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்புகள் அனைத்துமே முஸ்லிம்களுக்கு சாதகமாகவே வந்துள்ளன. நீதித்துறையின் மீது நம்பிக்கைவைத்துள்ள சமூகம் என்ற நிலையில் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என முன்பே முஸ்லிம்கள் கூறியிருந்தனர். ஆனால், நம்பிக்கைத் தொடர்பான விவகாரத்தை தீர்மானிப்பது நீதிமன்றம் அல்ல எனக்கூறியவர்கள் தற்பொழுது நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்து நல்லுபதேசம் செய்வதன் பின்னணியில் உள்ள விருப்பம் தெளிவானது.

1949 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதிற்குள் அத்துமீறி நுழைந்து சிலைகளை வைத்ததும், 1986 இல் மஸ்ஜிதின் பூட்டுகளை திறந்துக் கொடுத்ததும், மதில் சுவருக்குள் பூஜை நடத்த ஹிந்துக்களை அனுமதித்ததும், முஸ்லிம்களுக்கு மஸ்ஜிதிற்குள் நுழைய அனுமதி மறுத்ததும், தற்காலிக கோயிலுக்கு சட்ட அந்தஸ்து வழங்கியதுமெல்லாம் நீதிமறுக்கப்பட்டதன் உதாரணங்களாகும்.

லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு காட்டிவரும் தயக்கமும் நீதிமறுப்பின் இறுதி உதாரணமாகும்.

பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சட்டரீதியான போராட்டத்தை தொடர்வதுதான் முஸ்லிம்களுக்கு முன்னால் உள்ள வழி. நீதி கிடைக்கும்வரை சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றும் களத்தில் நிற்கும். இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"

கருத்துரையிடுக