24 அக்., 2010

'அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்

புதுடெல்லி,அக்.24:தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்வதை தான் நேரடியாக கண்டதாக, குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா கண்ணீர் சாட்சி அளித்துள்ளார்.

குல்பர்கா சொசைட்டி கூட்டு இனப் படுகொலையில் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கும் பொழுதுதான் கண்ணீர் மல்க இதனைத் தெரிவித்தார் ஸாகியா. 2002 பிப்ரவரி 22 ஆம் தேதி இச்சம்பவம் நடந்தது.

ஜாஃப்ரி உள்ளிட்ட 69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் நரேந்திர மோடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்திருந்தது.

"கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து பந்த் அறிவிக்கப்பட்டதால் வன்முறைக்களமாக மாறியது சூழல். அதிகாலை முதல் அக்கம்பக்கத்து முஸ்லிம்கள் எங்கள் வீட்டை நோக்கி வரத் துவங்கினர்.

அவர்களை ஹிந்துத்துவாவாதிகளின் தாக்குதலிருந்து பாதுகாக்க போலீஸை அழைக்க அவர்கள் ஜாஃப்ரியிடம் கோரினர்.

காலை 7.30 க்கு அவர்களை வீட்டிற்குள் அழைத்த ஜாஃப்ரி, ஒன்றாக இருக்கக் கூறியதுடன் நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் எனக் கூறினார்.

இந்த நேரத்திலிருந்தே ஜாஃப்ரி தொலைபேசியில் பலரையும் அழைக்க ஆரம்பித்தார். 11.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் பி.ஸி.பாண்டே வீட்டிற்கு வந்து ஜாஃப்ரியை வெளியே அழைத்தார். இதர முஸ்லிம்களை காப்பாற்றுவதற்கு பதிலாக தனது காரில் ஜாஃப்ரியையும், குடும்பத்தினரையும் மட்டும் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதியளித்தார் பாண்டே.

ஆனால், மிரண்டுபோன இதர முஸ்லிம்களை விட்டுச்செல்ல ஜாஃப்ரி மறுத்துவிட்டார். பாண்டே திரும்பிச் சென்றபிறகு, வன்முறையாளர்கள் சிறிய கேட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் வீட்டை நெருங்கிய பொழுது வீட்டின் மாடிக்கு செல்லுமாறு என்னிடம் கூறினார் ஜாஃப்ரி.

கோஷங்களை எழுப்பியவாறு வந்த ஆயுதங்கள் ஏந்திய கும்பல் ஜாஃப்ரியிடம் வெளியே வருமாறு கூறினர். தான் வெளியே வருவதாகவும், ஆனால் தனது வீட்டில் புகலிடம் தேடி வந்தவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் எனவும் ஜாஃப்ரி வன்முறையாளர்களிடம் கூறினார்.

வெளியேவந்த ஜாஃப்ரியை அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஆடைகளை கீறி எறிந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக்கி அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி எறிந்து தீவைத்துக் கொளுத்தி கொலைச் செய்தனர்." -இதனை சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி பி.யு.ஜோஷியின் முன்னால் ஸாகியா தெரிவித்தார்.

"ஆனால் போலீஸ் வந்தது மாலை 5.30 மணிக்காகும். வீட்டின் உள்ளே ஒழிந்திருந்த எங்களை வெளியேவருமாறு கூறினர். 18-19 உடல்கள் வீட்டின் வராந்தாவிலும் இதர இடங்களிலும் கிடந்தன. அதில் ஒன்று, தங்களுடைய அயல் வீட்டாரான கஸம்பாயின் கர்ப்பிணியான மருமகளாவார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு அதிலிருந்து சிசு வெளியே வந்திருந்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அக்கிரமக்காரர்கள்தான் இந்தக் கொலைகளை நடத்தினர்." இவ்வாறு ஸாக்கியா கூறினார்.

அதேவேளையில், குறுக்கு விசாரணையின்போது ஸாகியாவுக்கு மனித உரிமை ஆர்வலரான டீஸ்டா செடல்வாட், முன்னாள் போலீஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார், வழக்கறிஞர் ஷொஹைல் திர்மிஜி, ரைஸ்கான் பத்தான் ஆகியோருடன் தொடர்பிருப்பதாக கூற முயன்றார் எதிர்தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன். ஆனால், ஸாகியா அதனை மறுத்தார்.

டீஸ்டா செடல்வாட்டிடமிருந்து ஒரு உதவியையும் தான் பெறவில்லை எனவும், பல காலமாக அவரை தான் காணக்கூட செய்யவில்லை எனவும் ஸாகியா தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஸாகியா கண்ட ஏதேனும் உடல் சேதமாக்கப்பட்ட இறந்துப்போன ஒருவரின் பெயரைக் கூற இயலுமா என எதிர் தரப்பு வழக்கறிஞர் மிதேஷ் அமீன் கேள்வி கேட்டபொழுது, தனது கணவரை கொலைச் செய்த பாதகர்களிடம்தான் இதனைக் கேட்கவேண்டும் என ஸாகியா பதிலளித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்"

கருத்துரையிடுக