5 அக்., 2010

இனி ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவுக்கு தேவையா?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் ஜவஹர்லால் நேரு அரங்கில், இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிகள் கம்பீரமாக முடிவடைந்தது.

இதன் மூலம் இந்திய தேசம் மகிழ்ச்சியில் ஆழ்ந்ததைவிட ஆசுவாசமடைந்தது என வேண்டுமானால் கூறலாம். எட்டு வருடமாக தொடரும் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் போட்டி துவங்கவிருக்கும் ஒரு நாளுக்கு முன்பு கூட அலட்சியப் போக்கையும், போதாக் குறையையும், பொடுபோக்குத் தனத்தையும் இந்திய அதிகாரிகள் உலகத்திற்கு முன்னால் வெளிப்படுத்தினார்கள். அதனால்தான், பெரியதொரு வீழ்ச்சிகள் இல்லாமல், மேளத்தாளங்களோடு நிகழ்ச்சிகள் முடிவுற்றதில் எல்லோரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அவமானத்திலிருந்து 120 கோடி இந்திய மக்களின் தலைகள் தப்பின.

நிச்சயமாக காமன்வெல்த் போட்டிகள் என்பது ஒலிம்பிக்ஸ் மற்றும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் போன்று நவீனக் காலத்தில் முன்னேறும் நாடுகளின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கு உதவும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

உலக அரங்கில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அதன் அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் உயர்த்திப்பிடிக்க இத்தகையதொரு விழாக்கோல மேளங்கள் வாய்ப்பை உருவாக்கலாம். சமூகத்தில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், தேசம் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் நாட்டு மக்களை ஒன்றிணைக்க இத்தகைய நிகழ்ச்சிகள் உதவும். அவ்வகையில், விளையாட்டுப் போட்டிகள் அர்த்தம் பொருந்தியதாகும்.

காமன்வெல்த் போட்டிகள் சிறந்த முறையில் முடிவடையவும், இந்தியாவின் விளையாட்டு சாதனைகள் விளையாட்டு உலகில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறவும் உதவுமானால் அது மிக்க மகிழ்ச்சியைத்தரும் விஷயமாகும்.
ஆனால், இந்த அனுபவங்களிலிருந்து தேசம் பல பாடங்களை படிக்கவேண்டியுள்ளது.

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகளின் பெயரால் நடைபெறும் கோலாகலம் ஒரு பொதுமக்களின் திருவிழா அல்ல. பொதுமக்களை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் கூட அண்டவிடாமல் விரட்டியடிக்கின்றனர். இது குபேரர்கள், மேல் தட்டு வர்க்கம் உயர்குலத்தோர் மட்டுமே பங்கேற்கும் கோலகலமாகும். ஆனால், இந்த கோலாகலத்தின் பெயரால் ஏற்படும் கோடிக்கணக்கான பணத்தின் செலவை தலையில் வைத்துக்கட்டுவது இந்த நாட்டின் சாதாரணமக்களின் தலையிலாகும்.

இரண்டாவதாக, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு இத்தகையதொரு மேளதாளங்களும், விளையாட்டு கோலாகலங்களும் தேவையா? என்பதாகும்.

2020 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா தற்பொழுதே தயாராகி வருகிறது. இந்தியாவால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தமுடியும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சில பிரமுகர்களே பேசத் துவங்கியுள்ளனர். ஆனால், அத்தகையதொரு சர்வதேச போட்டிகள் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்கு தேவையா? என்பது சிந்திக்கவேண்டிய காரியமாகும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இனி ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவுக்கு தேவையா?"

கருத்துரையிடுக