27 அக்., 2010

மூட்டைப் பூச்சியால் நடுங்கும் நகரம்

நியூயார்க்,அக்.27:கதவு இடுக்குகளில், நாற்காலிகளில், குறிப்பாக மரக் கட்டில்களில் மறைந்து இருந்து கைகளிலும் கால்களிலும் கடித்து, ரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சியை யாரும் மறக்க முடியாது.

நியூயார்க் நகரின் வானளாவிய அலுவலகக் கட்டிடங்களிலும் பள்ளி கட்டிடங்களிலும் மூட்டைப் பூச்சி பரவி வருகிறதாம். நியூயார்க் நகரவாசிகள் பயந்துபோய் இருக்கிறார்கள். நியூயார்க்கை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் இதனால் கணிசமாகக் குறைந்துவிட்டதாம்.

நியூயார்க்கின் உயரமான கட்டிடம் எம்பயர் ஸ்டேட் பில்டிங். பிரபலமான மற்றொரு கட்டிடம் லிங்கன் சென்டர். இந்தக் கட்டிடங்களில் மூட்டைப் பூச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆடிப்போய் இருக்கிறார்கள். ஆப்பிள் விதை சைசில், பிரவுன் கலரில் இருக்கும் மூட்டைப் பூச்சிகள் நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது. ஓராண்டு வரை உணவு இல்லாமல் உயிர் வாழும் என்பதால், மக்களும் அதிகாரிகளும் என்ன செய்வது எனத் தெரியாமல் விழிக்கின்றனர்.

வேலைக்கு போவதற்கும் சினிமா, ஷாப்பிங் மால்ஸ் போன்ற பொது இடங்களுக்குப் போகவும் பயந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இதனால் ஒட்டுமொத்த வியாபாரம் டல்லடித்துப் போயிருக்கிறது. மற்ற ஊர்களில் இருந்தும் நியூயார்க் வர பயப்படுகிறார்களாம்.

எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து வழியும் நியூயார்க் சிட்டிக்கு விடுமுறையைக் கழிக்க வருபவர்கள் அதிகம். ஆனால், ஏற்கனவே ரிசர்வேஷன் செய்தவர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகிறார்களாம். இதனால் பல கோடி சுற்றுலா வருமானம் கிடைக்காமல் போய்விட்டது. இரண்டு பேர் சந்தித்தால் மூட்டைப் பூச்சி பற்றி பேசாமல் இருப்பதில்லையாம். அந்த அளவுக்கு மூட்டை பூச்சி பயம் ஆக்கிரமித்துள்ளது.

கரையான், மூட்டைப்பூச்சி போன்றவற்றை ஒட்டுமொத்தமாக அழிப்பது கஷ்டம். ஒன்றே ஒன்று போதும், பல்கி பெருகிவிடும். உலகம் முழுவதும் மக்கள் பயணம் செய்வது அதிகரித்திருப்பதும், சில வகை பூச்சிக் கொல்லிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதும்தான் திடீரென மூட்டைப் பூச்சி பரவியதற்கு காரணம் என்கிறார்கள்.

யானை போன்ற பெரிய மிருகங்களை அடைத்து வைத்து பயமில்லாமல் வாழும் மனிதன் கொசு, மூட்டை பூச்சிக்கு பயப்படுவது வேடிக்கைதான்.

செய்தி:dinakaran.com

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மூட்டைப் பூச்சியால் நடுங்கும் நகரம்"

கருத்துரையிடுக