11 நவ., 2010

பாதுகாப்பு குறித்த புகார்:நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா

மும்பை,நவ.11:தீப்பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப்போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

உலகிலேயே மிக மலிவான கார் எனப்படும் நானோ கார்கள் கடந்த ஆண்டு விற்பனைக்கு தரப்பட்டன. ரூ 1 லட்சம் இதன் விலை என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் ரூ 1.8 லட்சம் வரை வைத்து விற்கப்பட்டன இந்தக் கார்கள்.

ஆனால் அப்படி விற்கப்பட்ட கார்கள், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகளைத் தந்து கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுவரை மும்பை, லக்னௌ, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 6 நானோ கார்கள் ஓடும்போது தீப்பிடித்து எரிந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இதனால் நானோ பாதுகாப்பு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், வாடிக்காயாளர்கள் புகார் தெரிவித்துள்ள அத்தனை நானோ கார்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சில கார்களை திரும்பப் பெற்றும் உள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சிஇஓ கார்ல் பீட்டர் போர்ஸ்டர் கூறுகையில், "ஓடும் வழியில் கார் தீப்பிடித்து எரிவது உள்ளிட்ட பல புகார்கள் வந்துள்ளது உண்மைதான். இந்தப் பிரச்சினையை சமாளிக்க, நானோவுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்ய முடிவு செய்துள்ளோம். நாடு முழுக்க தற்போது 70,000 நானோ கார்கள் ஓடிக் கொண்டுள்ளன. இவற்றில் எத்தனை ஆயிரம் கார்களைத் திரும்பப் பெறுவதென்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.

மின் பாகங்கள் வெடித்துச் சிதறாமல் இருக்க அவற்றில் ப்யூஸ் பொருத்தவும் திட்டமிட்டுள்ளனர் நானோ பொறியாளர்கள்.

கடந்த மே மாதம்தான் நானோ கார்கள் முழுக்க முழுக்க பாதுகாப்பானவை என நிபுணர் குழு சான்றிதழ் வழங்கியது. ஆனால் அப்படி அறிவித்த இரண்டு மாதங்களுக்குள் டெல்லி உச்ச நீதிமன்றம் அருகே 6வது நானோ கார் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாதுகாப்பு குறித்த புகார்:நானோ கார்களை திரும்பப் பெறும் டாடா"

கருத்துரையிடுக