1 நவ., 2010

கஷ்மீர்:சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பதாக தீவிர சிந்தனையாளர்கள் அறிவித்துள்ளனர் - பட்கோங்கர்

புதுடெல்லி,நவ.1:கஷ்மீர் பிரச்சனைக்கு பரிகாரம் காண்பதற்காக கஷ்மீரில் தீவிர சிந்தனைக் கொண்ட அமைப்புகள் சமாதானத் திட்டத்தை சமர்ப்பிக்க தயார் என அறிவித்துள்ளதாக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள நடுவர் குழுவின் தலைவர் திலீப் பட்கோங்கர் தெரிவித்துள்ளார்.

நடுவர் குழுவுடனான சந்திப்பின்போது இதனை தெரிவித்ததாகவும், இது பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்புமுனை எனவும் பட்கோங்கர் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: "தீவிர சிந்தனைக் கொண்ட அமைப்பினரை நாங்கள் முதலில் சந்தித்த வேளையில், அவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்துவதற்கான விருப்பத்தை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்துதான் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாவது சந்திப்பின்போது தீவிர சிந்தனைக் கொண்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்ட நபர்தான் இந்த சமாதான திட்டத்தைக் குறித்து குறிப்பிட்டார்.

சிறிது நாட்கள் கூட எங்களுக்காக காத்திருக்க இயலுமா? என அவர் எங்களிடம் கேட்டார். தங்கள் வசம் சமாதானத்திற்கான வரைவுத்திட்டம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நிச்சயமாக அதனை பரிசீலிக்க நாங்கள் தயார் என அவர்களிடம் தெரிவித்தோம். இது மிக முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகும்." இவ்வாறு பட்கோங்கர் தெரிவித்தார்.

தீவிரவாத தொடர்புடையவர்களுடன் மத்தியஸ்தர்களில் ஒருவரான ராதாகுமார் பேச்சுவார்த்தை நடத்தியதுக் குறித்து கேள்வி எழுந்தபொழுது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானதாகும் என ராதாகுமார் பதிலளித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: "கல் வீசுபவர்களையும், இதர அரசியல் சிறைக் கைதிகளையும் சந்திப்பதற்காகத்தான் நான் சிறைச்சாலைக்கு சென்றேன். இதற்கிடையே தீவிர சிந்தனைக் கொண்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் உருவானது.

தீவிர போக்குடையவர்களின் நிலைப்பாட்டை நாம் ஏற்கவேண்டியதில்லை. ஆனால், அவர்கள் கூறுவது நாம் கேட்கவேண்டும்.

ஹூர்ரியத் அமைப்புகளின் நிலைப்பாடுகளை செவியேற்க நாங்கள் தயார்தான். மீர்வாய்ஸ் ஃபாரூக், கிலானி போன்ற தலைவர்களை முதல் சுற்றுப் பயணத்திலேயே சந்திப்பது இயலாத காரியம் என ராதாகுமார் தெரிவித்தார்.

ஹூர்ரியத் மாநாட்டுக் கட்சியின் மொழியிலேயே மத்திய அரசின் மத்தியஸ்த குழு பேசுவதாக பா.ஜ.க கூறும் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பட்கோங்கர், அவ்வாறெனில் ஏன் எங்களை சந்திக்க ஹூர்ரியத் தலைவர்கள் மறுத்தனர்? கேள்வி எழுப்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர்:சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பதாக தீவிர சிந்தனையாளர்கள் அறிவித்துள்ளனர் - பட்கோங்கர்"

கருத்துரையிடுக