9 நவ., 2010

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

புதுடெல்லி,நவ.9:ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே உரை நிகழ்த்தும் வேளையில் இந்தியாவின் நீண்டகால கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஒபாமா தெரிவித்தார்.

"இரண்டு பெரிய நாடுகள் என்ற நிலையில் அமெரிக்காவும், இந்தியாவும் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட இயலும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நம்பிக்கையான, நீதியான ஐ.நா பாதுகவுன்சில் உள்ளிட்ட ஆரோக்கியமான உலக சூழலைத்தான் அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. சக்தி அதிகமாகும் பொழுது பொறுப்புகளும் அதிகரிக்கும். பாதுகாப்பும், சமாதானமும், சர்வதேச ஒத்துழைப்பும், மனித உரிமைகளும் உறுதிச் செய்வதுதான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் துவக்கப்பட்டதின் நோக்கமாகும். இது எல்லா நாடுகளின் பொறுப்புமாகும்.

பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியை விரும்பும் இதர நாடுகளை விட இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்குத்தான் நாங்கள் விரும்புகிறோம்.

மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்போம். மும்பையில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானவர்களையும், தீரமிக்க குடும்பத்தினரையும் நான் சந்தித்தேன்.

ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் இந்த பாராளுமன்றமும் தாக்குதலுக்குள்ளானது. நிரபராதிகளான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொலைச் செய்வதை ஒருவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால்தான், முன்பைவிட நாம் ஒன்றினைந்து செயல்படவேண்டும் எனக் கூறுகிறேன். அது எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதலை தடுக்கும். பயங்கரவாதத்தின் காரணமாகத்தான் ஆஃப்கானில் அமெரிக்கா அல்காயிதாவுடன் போராடியது.

ஆஃப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா அளித்துவரும் உதவிகள், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது. தாலிபானை தகர்ப்பதற்கு ஆப்கான் அரசிற்கு அளித்துவரும் பயிற்சி தொடர்கிறது. அடுத்த கோடைக்காலத்தில் ஆஃப்கானின் கட்டுப்பாட்டை ஆஃப்கான் அரசிடம் அமெரிக்க ராணுவம் ஒப்படைக்கும். ஆனால், தீவிரவாதிகளின் கரங்களில் ஆஃப்கான் மக்களை அமெரிக்கா விட்டுச் செல்லாது.

அல்காயிதாவை தகர்ப்பதற்கு ஆஃப்கானின் இருபுறத்திலிருந்தும் அமெரிக்கா முயன்று வருகிறது. அதனால்தான் நாங்கள் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். அல்காயிதா பாகிஸ்தான் மக்களுக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான உறைவிடமாக மாற்றுவதற்கெதிராக பாகிஸ்தான் தலைமையை நிர்பந்திப்பது தொடரும். பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் செழிப்பாக இருப்பது அத்தியாவசியமானதாகும்.

இந்தியா-பாகிஸ்தானுக்கிடையேயான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் பரிகாரம் காணவேண்டும்." இவ்வாறு கூறிய ஒபாமா, இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புகழாரம் சூட்டினார்.

ஜனநாயகம்தான் இந்தியாவை நிலைநிறுத்துகிறது என்றார் ஒபாமா. காந்திஜியிடமிருந்து தான் எப்பொழுதும் உந்துதலை பெறுகிறேன் என்றுக் கூறிய ஒபாமா காந்திஜியின் எளிமையான வாழ்க்கை உலகத்திற்கு முன்மாதிரி என்றார்.

உலகமெங்கும் நடைபெறும் மனித உரிமை மீறல்களை இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளிட்ட நாடுகள் கண்டிக்கவேண்டும் எனவும் அவர் கூறினார். இந்தியா இத்தகைய விஷயங்களை புறக்கணிப்பதே வழக்கமாகும். இது இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதோ, அந்நாடுகளின் இறையாண்மையில் அத்துமீறலோ அல்ல என ஒபாமா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு"

கருத்துரையிடுக