25 நவ., 2010

பீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்

தேர்தல் கருத்துக் கணிப்புகளை உண்மை என நிரூபிக்கும் முடிவுகள் பீகார் தேர்தலில் நிகழ்ந்தேறியுள்ளது.

நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து பீகார் மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தல் முடிவின் பின்னணியில் பீகார் மக்கள் எதனை விரும்புகின்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

முதல்வர் என்ற நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமரும் நிதீஷ்குமாரின் அரசியல் தந்திரங்கள், நல்லதொரு ஆட்சிமுறைக்கும் கிடைத்த வெற்றிதான் இது.

மாநில மற்றும் தேசிய அளவில் பிரபலமான லாலுபிரசாத் என்ற அரசியல் ராவணனுக்கு கிடைத்த மிகப்பெரிய அடியாகவே பீகார் தேர்தல் முடிவுகள் மாறியுள்ளன.

யாதவ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையேதான் லாலுவின் வாக்கு வங்கிகள் அடங்கியிருந்தன. இந்த வாக்கு வங்கியை தன் பக்கம் நிதீஷ்குமார் ஈர்த்துவிட்டார் என்பதைத்தான் இத்தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஆட்சி நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம்கள், தலித்துகள், பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெறுவதற்காக வன்முறையற்ற பீகார் என்ற நிதீஷின் முழக்கம் பீகார் மக்களிடம் எடுபட்டது. கால்நடை தீவன ஊழலும், மனைவி ராஃப்ரி தேவியை முதல்வராக்கி ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சிபுரிந்த லாலுவின் நடவடிக்கையில் பழகிப்போன பீகார் மக்களுக்கு நிதீஷின் ஊழலற்ற ஆட்சி என்ற நிலைப்பாடு ஈர்த்தது எதிர்பார்த்த ஒன்றுதான்.

வெளிநாடுகளில் பணியாற்றும் பீகாரிகளிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தொழில் துறையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு துவக்கம் குறித்ததும், அடிப்படை வசதிகளின் வளர்ச்சியும், விவசாயத்திற்கு ஆதரவான கொள்கைகளும் நிதீஷின் ஆட்சியை மக்கள் விரும்பும் ஆட்சியாக மாற்றிவிட்டது.

உறைவிடமில்லாதவர்களுக்கு நிலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் நிதீஷிற்கு ஆதரவாக மாறின.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட போதிலும் மதசார்பற்ற நம்பிக்கையை நிலைநிறுத்துவதில் நிதீஷ்குமார் மிகவும் கவனமாக இருந்தார். இது தேர்தலில் அதிகமாகவே பிரதிபலித்துள்ளது.

பா.ஜ.கவின் பிரச்சார பீரங்கியான நரேந்திர மோடியை பீகாரில் கால் ஊன்ற அனுமதிக்காதது, மோடியுடன் இணைந்து நிற்பது போன்ற புகைப்படத்துடன் வெளியான விளம்பரத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது, அத்வானி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் வரும் முன்பே நிதீஷ்குமார் விடைப்பெற்றது, பா.ஜ.க தலைவர்களுடனான இரவு விருந்தில் கலந்துக் கொள்ளாதது போன்ற நிலைப்பாடுகள் நிதீஷின் மீது முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இன்னொரு காரணமாகும். ஜாதி,மத உணர்ச்சிகளில் சிக்கித் தவித்த பீகார் அரசியலில் வளர்ச்சித் திட்டங்களின் மூலம் நிதீஷ்குமார் பெருவாரியான ஆதரவைப் பெற்றார் என்பது சரியல்ல, மாறாக ஜாதி,மத வாக்கு வங்கிகளை தனக்கு அனுகூலமாக மாற்றினார் என்பதுதான் உண்மை.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பீகார் தேர்தல் முடிவுகள் தரும் பாடங்கள்"

கருத்துரையிடுக