14 டிச., 2010

இலங்கை தேசிய கீதம் தமிழில் பாட தடை - முதல்வர் கருணாநிதி கண்டனம்

சென்னை,டிச:இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் அதிபர் ராஜபக்சே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசு அலுவலக மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழில் தேசிய கீதம் பாடும் வழக்கத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

இலங்கை ஒரே நாடு, ஒரே நாட்டில் இரண்டு தேசிய கீதம் இருக்கக் கூடாது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் தேசிய கீதம் பாடும் வழக்கம் இல்லை என்று அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புண்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கின்றேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தினகரன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இலங்கை தேசிய கீதம் தமிழில் பாட தடை - முதல்வர் கருணாநிதி கண்டனம்"

கருத்துரையிடுக