14 டிச., 2010

பாஜக-வின் ஊழல் பட்டியல் பெரிது: சோனியா

புதுடெல்லி,டிச.14:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் குறை கூறும் பாஜகவின் ஊழல் பட்டியல் பெரியது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். அனைத்து நிலைகளிலும் ஊழல் பரவியிருப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கிப்போன நிலையில் திங்களன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அவர் பேசியது:
ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக கட்சியினர், கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு 'சிறப்பாக' செயல்படுகின்றனர் என்பதை நாடே அறியும். பாஜக ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். பாஜக தேசிய தலைவராயிருந்த பங்காரு லட்சுமணன், லஞ்சம் பெற்றதை கேமராவில் படமெடுத்து தெஹல்கா நிறுவனம் வெளியிடப்பட்டது. இப்படி பாஜக-வினரின் ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் வீணடித்த எதிர்க்கட்சியினரை மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றார் சோனியா. அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பது வேதனையளிக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஊழல் பேர்வழிகள், தவறான நடத்தை உள்ளவர்களை ஒருபோதும் ஏற்க முடியாது. அனைத்து நிலைகளிலும் ஊழல் பரவியிருப்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒழிக்க முன்வர வேண்டும். அதிகரித்துவரும் இந்த பிரச்னையைத் தடுக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் வெளிப்படையான, நேர்மையான நடைமுறையை பின்பற்றும். இந்நிலையில் ஊழலை ஒருபோதும் ஏற்க முடியாது. இத்தகைய ஊழல் பேர்வழிகளையும் ஏற்க முடியாது. ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டவுடனேயே, மாநில முதல்வர்களையோ, மத்திய அமைச்சர்களையோ பதவி விலக காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. தங்கள் மீதான குற்றச்சாட்டை, பதவியை ராஜிநாமா செய்த பிறகு எதிர்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. இந்த அடிப்படையில்தான் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர் ஆகியோர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டனர் என்றார்.

ஜேபிசி-யை ஏற்காதது ஏன்?:
நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுப்பது, இந்த விவகாரத்தில் உள்ள சில உண்மைகளை மறைப்பதற்காகத்தான் என்று குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, "காங்கிரஸ் அரசு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்த அரசு எதைக் கண்டும் அஞ்சவில்லை" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுக் கணக்குக் குழு, சிபிஐ ஆகியன விசாரணையைத் தொடங்கிவிட்ட நிலையில் ஜேபிசி அமைப்பது தேவையா? என்று கருதியே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றார்.

அரசியல் ஆதாயத்துக்காக பிரதமரை கட்சி ஒருபோதும் கைவிட்டுவிடாது:
நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைத்தால், பிரதமருக்கு சம்மன் அனுப்பி விசாரிப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அதனால்தான் ஜேபிசி அமைக்க அனுமதிக்கவில்லையா? என்று கேட்டதற்கு, "பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அரசு மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அவருக்கு பக்கபலமாக காங்கிரஸ் கட்சி எப்போதும் இருக்கும்," என்று சோனியா கூறினார். அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர் மன்மோகன் சிங்கை கட்சி ஒருபோதும் கைவிட்டுவிடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாஜக-வின் ஊழல் பட்டியல் பெரிது: சோனியா"

கருத்துரையிடுக