15 டிச., 2010

பொறுப்பற்ற எம்பிக்களால் ரூ.146 கோடி மக்கள் வரிப்பணம் வீண்

டெல்லி,டிச.15: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை தேவை என்று கோரிய எதிர்க்கட்சிகளாலும், விசாரணைக்கு உத்தரவிட மாட்டோம் என்று பிடிவாதமாக கூறி வந்த காங்கிரஸாலும் இன்று மக்கள் வரிப்பணம் ரூ.146 கோடி படு மோசமாக விரயமாக்கப்பட்டுள்ளது.

இந்த வரிப்பணத்தை எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் செலவிடவில்லை. மாறாக, ஒன்றுமே செய்யாமல் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.

நவம்பர் 9ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடந்த குளிர்காலக் கூட்டத் தொடரால்தான் இந்த பெரும் நஷ்டம். இந்த நாட்களில் ஒரு நாள் கூட அவைகள் செயல்பட முடியவில்லை. தினசரி கூடும், பத்து நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு விடும். இப்படியே முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை விளையாடி வந்தனர் எதிர்க்கட்சி எம்.பிக்களும், ஆளுங்கட்சியினரும்.

இந்த எம்.பிக்களின் திருவிளையாடலுக்காக செலவான தொகைதான் ரூ.146 கோடி. ரூ.1.74 லட்சம் கோடி நஷ்டத்தை ராஜா ஏற்படுத்தினார் என்று கூறி அதற்கு ஜேபிசி விசாரணை கோரி எதிர்க்கட்சியினர் நடத்திய அமளி துமளிகளால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் இந்த ரூ.146 கோடி.

எதிர்க்கட்சிகள் சபையை நடத்த விடமாட்டார்கள் என்ற நிலை தெளிவாக தெரிந்தபோதிலும், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காமல், நாட்டு மக்களிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் வேண்டும் என்றே நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க முயலாமல், வேடிக்கை பார்த்து வந்த காங்கிரஸ் அரசும் கூட இந்த நஷ்டத்திற்கு பொறுப்பேற்றாக வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் லோக்சபாவுக்கான மொத்த பட்ஜெட் ரூ.347 கோடியாகும். அதில், கிட்டத்தட்ட பாதிப் பணத்தை இப்படி ஒன்றுமே செய்யாமல் வீணடித்துள்ளனர் பொறுப்பற்ற நமது எம்.பிக்கள்.

இந்தப் பணத்தைக் கொண்டு நூறு கிராமங்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கலாம். ஏதாவது வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்திருக்கலாம். ஆனால் இப்படி எந்த நல்லதுக்கும் பயன்படாமல் மக்கள் வரிப்பணத்தை ஒன்றும் செய்யாமல் வீணடித்திருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பொறுப்பற்ற எம்பிக்களால் ரூ.146 கோடி மக்கள் வரிப்பணம் வீண்"

கருத்துரையிடுக