9 டிச., 2010

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு:2001லிருந்தே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - பா.ஜ.கவின் உத்தமர் வேடம் கலையுமா?

டெல்லி.டிச.9:2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மேலும் விரிவாக விசாரிக்கும் வகையில், கடந்த 2001ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், என்ன நடந்தது என்பதையும் சேர்த்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்போது ராசா செய்தது போல, அப்போதும், முதலில் வருவோருக்கே உரிமம் என்ற முறையைத்தான் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறுகையில், 'இந்த வழக்கில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மட்டும் பிரச்சனை எழவில்லை. மாறாக அதற்கும் மேலும் என்ன நடந்தது என்பது தெரிய வேண்டும். இந்த வழக்கின் விசாரணையில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

இருப்பினும், பிரச்சனையின் ஆழத்தை மேலும் விரிவாக ஆராயும் வகையில், கடந்த 2001ம் ஆண்டு (பாஜக ஆட்சியில்) என்ன நடந்தது என்பதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதை சிபிஐதான் விசாரித்து நடந்ததை வெளியே கொண்டு வர வேண்டும் என்றனர். மேலும் இந்த வழக்கில் தீர்ப்பையும் ஒத்தி வைத்தனர்.

நீதிபதிகளின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், 2001ம் ஆண்டு பாஜக ஆட்சியில் என்ன கொள்கையை தொலைத்தொடர்புத்துறை கடைப்பிடித்ததோ, அதையேதான் நானும் பின்பற்றினேன் என்று முன்னாள் ராசா தொடர்ந்து கூறி வருகிறார்.

பாஜகவின் 'உத்தமர் வேடம்' கலையும்?:
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு ராசாவுக்கு சாதகமாக மாறக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெரும் பிரச்சனையாக்கி, 'உத்தமர் வேடம்' போட்டு வரும் பாஜகவுக்கு இது பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

2001ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது ஏலம் நடத்துவதற்குப் பதில், முதலில் வருவோருக்கு உரிமம் என்ற கொள்கைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2001ம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறையின் அமைச்சரான மறைந்த பிரமோத் மகாஜன் தான் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வி்ற்பதில் முக்கிய முடிவுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக அப்போதே புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. (பிரமோத்தை சுட்டுக் கொன்ற அவரது அண்ணன் பிரவீன மகாஜனுக்கு ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் மாதம் ரூ.5 லட்சம் வரை ஊதியம் தந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கு என்ன வேலை பார்த்து வந்தார் என்பது தெரியவில்லை).

மேலும் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையும் வகுக்கப்பட்டது. அதன்படி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான லைசென்ஸ் கட்டணம், லாபத்தி்ன் அடிப்படையிலான கட்டணமாக மாற்றப்பட்டது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பலன் கிடைத்தது. ஆனால், நாட்டுக்கு பெருமளவில் நிதி இழப்பு ஏற்பட்டது.

மேலும் மகாஜன் அமைச்சராக இருந்தபோது தான் ரிலையன்ஸ் நிறுவனம் லைசென்ஸ் கட்டணத்தையே செலுத்துவதற்கு முன் நாடு முழுவதும் சேவையைத் தொடங்கவும் அனுமதி தரப்பட்டது.

பின்னர் மகாஜன் பதவி விலகி தொலைத் தொடர்பு அமைச்சரானார் அருண் ஷோரி. இதையடு்த்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அமைச்சரவையில் தயாநிதி மாறன் இந்தத் துறையின் அமைச்சரானார்.

அவரைத் தொடர்ந்தே ராசா தொலைத்தொடர்பு அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு:2001லிருந்தே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு - பா.ஜ.கவின் உத்தமர் வேடம் கலையுமா?"

கருத்துரையிடுக