7 டிச., 2010

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு - ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை

டெல்லி,டிச.7:சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. சென்னை சேத்துப்பட்டு எம்.வி.நாயுடு தெருவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகமும் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 11 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பில் உடல்கள் சிதறி, எதிர் வீட்டு மாடியில் டியூசன் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் மீது வந்து உடல் பாகங்கள் விழுந்தன. அந்த அளவுக்கு குண்டு வெடிப்பு மிக பயங்கரமாக நடந்தது.

இந்த வழக்கில் அபுபக்கர் சித்திக், ரபிக் அகமது, ஹைதர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீ்ர்ப்பில், இந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டது. ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர் போன்ற வெடி பொருட்களை வாங்கியதாக மூவரும் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், குண்டுவெடிப்பில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒப்புதல் வாக்குமூலம் தவிர, அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக வேறு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, தவறான முறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுதலை செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு - ஆயுள் தண்டனை பெற்ற 3 பேர் விடுதலை"

கருத்துரையிடுக