7 டிச., 2010

தலிபான்களுக்கு இந்தியா, ஈரான் உதவுவதாக அமெரிக்காவிடம் ஐக்கிய அரபு அமீரகம் புகார்: விக்கிலீக்ஸ் தகவல்

வாஷிங்டன்,டிச.7:பாகிஸ்தானில் வன்முறையை அரங்கேற்றிவரும் தலிபான்களுக்கும், பஷ்டூன் பிரிவினைவாதிகளுக்கும் இந்தியாவும், ஈரானும் பக்கபலமாக இருந்து உதவி வருவதாக அமெரிக்காவிடம் ஐக்கிய அரபு அமீரகம் ரகசியமாகப் புகார் தெரிவித்துள்ளது.

இந்த புகார் தொடர்பான தகவலை அமெரிக்க நிதித்துறை ரகசியமாக வைத்திருந்தது. அதை விக்கிலீக்ஸ் இணையதளம் கைப்பற்றி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு கிடைக்கும் நிதியில் பெருமளவு நிதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை அதிகாரிகளும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, தலிபான்களுக்கு தாங்கள் எவ்வித உதவியும் செய்யவில்லை என்று ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.

அதேசமயம், பாகிஸ்தான் தலிபான்கள், பஷ்டூன் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா, ஈரான் ஆகிய இரு நாடுகள்தான் பக்கபலமாக இருக்கின்றன என்றும் புகார் தெரிவித்தனர் என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஜமாத் உத் தவாவுக்கு சீனா ஆதரவு:
மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு நிதி திரட்டும் ஜமாத் உத் தவா மீதும், அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு எதிராகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடை விதிக்க தீவிர நடவடிக்கையை மேற்கொண்ட போது அதை சீனா கடுமையாக எதிர்த்தது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகவுள்ளதைப் பயன்படுத்தி ஜமாத் உத் தவாவுக்கு எதிராக பிற உறுப்பு நாடுகள் எடுத்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டது என்று விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்கவே சீனா இப்படி நடந்து கொண்டது. ஜமாத் உத் தவா அமைப்பு தொடர்ந்து தனது போக்கில் செயல்படவும் சீனா தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது என்றும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சீனா போர் தொடுக்கலாம்:
அமெரிக்கா மீது சீனா திடீரென போர் தொடுக்கலாம் என்றும், பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கும்படியும் ஆஸ்திரேலியா ரகசியமாக எச்சரிக்கை விடுத்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. தைவான், திபெத் விவகாரங்களை உணர்வு பூர்வமானதாக சீனா கருதுகிறது. இந்த விவகாரங்களில் தங்களுக்கு எதிராக பிற நாடுகள் கருத்துகூறுவதை அந்நாடு விரும்பவில்லை. அந்த விதத்தில், அமெரிக்காவின் கருத்தால் சீனத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் அமெரிக்கா மீது திடீரென போர் தொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதனால் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் விதத்தில் ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூட் எச்சரித்திருந்ததாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

ஐ.எஸ்.ஐ. மீது நம்பிக்கை இல்லை:
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தரும் தகவல்களில் தங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்று அமெரிக்காவிடம் செளதி அரேபியா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரிச்சர்டு ஹோல்புரூக்கை சந்தித்துப் பேசிய செளதி அரேபியாவின் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரி இதைக் கூறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.22.50 கோடி நிதியுதவி கிடைக்கிறது. இந்த நிதி முழுவதும் அதன் தாய் அமைப்பான ஜமாத்-உத்-தவா மூலம் திரட்டப்படுகிறது என்றும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

செய்தி:தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தலிபான்களுக்கு இந்தியா, ஈரான் உதவுவதாக அமெரிக்காவிடம் ஐக்கிய அரபு அமீரகம் புகார்: விக்கிலீக்ஸ் தகவல்"

கருத்துரையிடுக