5 டிச., 2010

டிசம்பர்-6 ஆபத்தான கட்டத்தில் பாப்ரி மஸ்ஜித் விவகாரம்!திருத்தப்படுமா தீர்ப்பு!

டிசம்பர் 6! இந்திய வரலாற்றில் இடம்பிடித்த நிரந்தரமான கறுப்புதினம்! இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கைக்கு தீரா களங்கத்தை ஏற்படுத்திய தினம்! உலக நாடுகளின் முன்னிலையில் இந்திய தேசம் வெட்கித் தலைகுனிந்த தினம்!

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் உள்ளம் நடுங்கும் நினைவலைகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாம் தேதி ஒவ்வொரு இந்திய குடிமகனின் மனத் திரையிலும் மாறாத வடுவாக காட்சியளிக்கிறது.
இச்சம்பவம் ஏற்படுத்திய ஆழமான காயங்கள் ஆறவேண்டுமானால், பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும் என வாய் சவாடல் விட்டவர்களெல்லாம் மெளனிகளாகிவிட்டனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டப்படும் என அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் உலகிற்கு அறிவித்தார். பிரபல மதசார்பற்றவாதியும், ஃப்ரண்ட்லைன் பத்திரிகையின் அதிபருமான என்.ராம், 1992 டிசம்பர் இதழின் தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்: 'உலக நாடுகளை திடுக்கிட வைத்த அயோத்தி பிரச்சனையில் என்னச் செய்யவேண்டும் என்பது புரியாமல் திணறுகிறது மத்திய அரசு.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மத்திய அரசு கைப்பற்றி டிசம்பர் ஆறாம் தேதி பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அதே இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை மீண்டு கட்டுவதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்' என்பதாகும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மதசார்பற்றவாதிகள் முழங்கிய நீதியின் குரல் முடங்கிப்போய் பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய தீயசக்திகளின் சப்தம் உச்சத்தில் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப் பெற்றிருந்த இடத்தில்தான் ராமர்கோயிலைக் கட்டுவோம் என்ற பாசிச ஹிந்துத்துவா சக்திகளின் கூக்குரலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நம்பிக்கையையும், புராணங்களையும், புரட்டுக்களையும் ஆதாராமாகக் கொண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு மாறியுள்ளது.

இத்தீர்ப்பு இந்தியாவின் நீதித்துறைக்கு ஏற்படப் போகும் அபாயத்தைக் குறித்த முன்னறிவிப்பாக மாறிவிட்டது.

"பாப்ரி மஸ்ஜித் மட்டுமல்ல, சங்க்பரிவாரத்தின் திட்டத்தில் மூவாயிரம் மஸ்ஜிதுகளுண்டு. அவர்களின் கோஷமே பாப்ரியை அடுத்து காசி, மதுரா என்பதாகும். நாளை என்ன நடக்கும் என்பதுக் குறித்து தற்பொழுது நம்மால் எதுவும் கூறவியலாது. இது ஒரு துர்பாக்கியகரமான தவறான முன்னுதாரணமாகும். நாம் இதனைக் குறித்து அஞ்ச வேண்டியுள்ளது" - அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து பிரபல வரலாற்றாய்வாளர் டாக்டர் கே.என்.பணிக்கர் கூறிய கருத்து இது.

பாப்ரி மஸ்ஜித் விவகாரம் மிகவும் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளதை இதன் மூலம் நாம் உணரலாம். பாப்ரி மஸ்ஜித் புனர் நிர்மாணத்தைக் குறித்து எவரும் தற்பொழுது பேசுவதில்லை. அதுமட்டுமல்ல, பேசக்கூடாது என சில மேதாவிகள் கூறி வருகின்றனர். தீர்ப்பிற்கு பிறகு இந்திய சமூகம் கடைபிடித்த மெளனத்தை தவறாக விளங்கிவிட்டு சில ஊடகங்களும், தலைவர்களும் இந்தியா அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிப்பதாக காதில் பூ சுற்றுகின்றனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னரும், பின்பும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அநீதிகளையும், அக்கிரமங்களையும் மறந்துவிடவேண்டும் என இவர்கள் மறைமுகமாக எடுத்துரைக்கின்றனர். நீதியை ஏற்கமாட்டோம் என தொண்டைக் கிழிய கத்திய காவிக்கும்பல்களெல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு பின்னர் நீதியின் அதிகாரப்பூர்வ ஏஜண்டுகளாக வேடமிட்டு அலைகின்றனர்.

நம்பிக்கையிழந்த நிலையில் காணப்படும் முஸ்லிம் சமூகத்திலோ சிலர் பாப்ரி மஸ்ஜிதை வைத்தே தங்களை வளர்த்துக் கொள்ளலாம் என கனவுக்காண்பதுதான் துரதிர்ஷ்டவசமானதாகும்.

முஸ்லிம்கள் தங்கள் மிச்சமீத நம்பிக்கையை இறுதியாக உச்சநீதிமன்றத்திடம் வைத்துள்ளனர். தீர்ப்பு திருத்தப்படும் என எதிர்பார்ப்போம்!

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டிசம்பர்-6 ஆபத்தான கட்டத்தில் பாப்ரி மஸ்ஜித் விவகாரம்!திருத்தப்படுமா தீர்ப்பு!"

கருத்துரையிடுக