10 டிச., 2010

அமெரிக்க விமானநிலையத்தில் இந்திய தூதருக்கு அவமரியாதை

வாஷிங்டன்,டிச.10:அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை, சாதாரண பயணிகள் போல சோதனையிட்டு அமெரிக்க விமான நிலையத்தில் அவமரியாதை செய்துள்ளனர்.

முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஷூவையெல்லாம் கழற்றச் சொல்லி, உடல் முழுவதும் தடவி சோதனையிட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அவமதித்தனர். தற்போது அதே போன்ற அவமானத்தை மீரா சங்கர் சந்தித்துள்ளார்.

டிசம்பர் 4ம் தேதி அமெரிக்காவின் மிஸ்ஸிப்பியின் ஜாக்சன் எவர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பால்டிமோர் செல்வதற்காக விமானத்தில் ஏற காத்திருந்தார் மீரா சங்கர்.

இந்திய பாரம்பரிய உடையான சேலையில் அவர் வந்திருந்தார். பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் அவர் காத்திருந்தபோது திடீரென வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து தான் இந்தியத் தூதர் என்று மீரா சங்கர் கூறியுள்ளார். ஆனால் அதை அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவரை தனி அறைக்குக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு பெண் அதிகாரிகள் உடல் முழுவதையும் கைகளால் சோதனை செய்து மீரா சங்கரை அவமானப்படுத்தியுள்ளனர்.

இதனால் வெகுண்ட மீரா சங்கர், தான் ஒரு தூதர் என்பதை மீண்டும் கூறி அதுதொடர்பான ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனால் நீங்கள் சேலை கட்டி வந்துள்ளதால் உங்களை சோதனையிட்டாக வேண்டும் என்று கூறியுள்ளனர் பாதுகாப்பு அதிகாரிகள்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதனை செய்யும் ஸ்கிரீனர் வசதி இல்லாததால்தான் மீரா சங்கரை கைகளால் பரிசோதனை செய்யும் நிலை ஏற்பட்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜாக்சன் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கவே வந்திருந்தார் மீரா சங்கர். தனது ஜாக்சன் பயணத்தின்போது லெப்டினென்ட் கவர்னர் பில் பிரையன்ட், மிஸ்ஸிஸிப்பி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள், சில இந்தியர்கள் ஆகியோரை அவர் சந்தித்தார்.

மீரா சங்கருக்கு ஏற்பட்ட அவமரியாதை குறித்து மிஸ்ஸிஸிப்பி மாகாண ஆளுநர் ஹாலி பார்பரின் செய்தித் தொடர்பாளர் டேன் டர்னர் கூறுகையில், இச்சம்பவம் குறித்து ஆளுநர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய முயன்று வருகிறோம் என்றார்.

தட்ஸ் தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க விமானநிலையத்தில் இந்திய தூதருக்கு அவமரியாதை"

கருத்துரையிடுக